ஆலூர்: விஜய் ஹசாரே டிராபி ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் ஐசிசி யு-19 உலக கோப்பை நாயகன் ஷுப்மான் கில்லின் அதிரடி சதத்தால், பஞ்சாப் அணி 4 ரன் வித்தியாசத்தில் கர்நாடக அணியை வென்றது. ஆலூர், கர்நாடக கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த பஞ்சாப் அணி 42 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 269 ரன் குவித்தது. தொடக்க வீரர் ஷுப்மான் கில் ஆட்டமிழக்காமல் 123 ரன் (122 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசினார். மன்தீப் 64, யுவராஜ் சிங் 36, குர்கீரத் சிங் 35* ரன் எடுத்தனர்.
அடுத்து களமிறங்கிய கர்நாடக அணி 42 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன் எடுத்து 4 ரன் வித்தியாசத்தில் தோற்றது. லோகேஷ் ராகுல் 107 ரன் (91 பந்து, 8 பவுண்டரி, 5 சிக்சர்), தேஷ்பாண்டே 53, அகர்வால் 28, கேப்டன் வினய்குமார் 26* ரன் எடுத்தனர். பஞ்சாப் அணி 4 புள்ளிகள் பெற்றது.