அயோத்தி சமரச முயற்சிக்கு பெரும் பின்னடைவு : பாபர் மசூதி நிலைப்பாட்டில் மாற்றமில்லை...முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அறிவிப்பு

2018-02-12@ 15:15:45

ஐதராபாத்: பாபர் மசூதி விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டில் இருந்து துளியும் விலகப்போவதில்லை என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளதால் அயோத்தி சமரச பேச்சுவார்த்தைக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. ஐதராபாத் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாட்களாக அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்து அமைப்பினரின் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வரும் மவுலானா சல்மான் உசேன் நத்வி ஐதராபாத் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது பாபர் மசூதிக்காக சட்டப்போராட்டம் நடத்தி வரும் இடத்துக்கு பதிலாக வேறொரு இடத்தில் மசூதி ஒன்றை கட்டலாம் என்று அவர் யோசனை தெரிவித்ததாக தெரிகிறது. இதை மற்ற உறுப்பினர்கள் ஏற்க மறுத்துவிட்டதால் பதவி விலகுவதாக தெரிவித்த நத்வியை நிர்வாக உறுப்பினர் பொறுப்பில் இருந்து முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் நீக்கிவிட்டது.

இந்நிலையில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட வேண்டும் என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கூறியுள்ளது. ஒரு முறை கட்டப்பட்ட மசூதி உலகின் அழிவுக்காலம் வரை நீடிக்கும் என்று அது தெரிவித்துள்ளது. ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அயோத்தி பிரச்சனைக்கு சமரச தீர்வுகாண முயற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் தீர்மானம் பேச்சுவார்த்தைக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!