லண்டன்: இங்கிலாந்தில் 1903ல் கண்டுபிடிக்கப்பட்ட 10 ஆயிரம் ஆண்டு பழமையான எலும்பு கூட்டின் வாரிசு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து நாட்டில் சோமர்செட் பகுதியில் செடார் ஜார்ஜ் என்ற இடத்தில் காப் குகையில் கடந்த 1903ல் ஒரு மனிதனின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. குளிர் சூழ்நிலையில் அந்த எலும்புக்கூடு இருந்ததால் டிஎன்ஏ மூலம் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் 10 ஆயிரம் ஆண்டுக்கு முன் உள்ள எலும்பு கூடு என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைப்பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில் அந்த எலும்பு கூட்டிற்கு சொந்தமான மனிதன் கருப்பு நிறம், நீல நிற கண்கள் கொண்டவனாக கண்டுபிடிக்கப்பட்டது.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் வெள்ளையர்கள். எனவே, இது குழப்பத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொண்டதில், அந்த மனிதர் ஆப்ரிக்காவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகள் வழியாக இங்கிலாந்தில் குடியேறி இருக்கலாம் என்றும், கால சூழ்நிலை, பணி ஆகியவற்றின் காரணமாக நிறம் மாறியிருக்கலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே சோமர்செட் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற வரலாற்று ஆசிரியர் அட்ரியன் டார்ஜெட் என்பவர் பழங்கால மனிதனின் படத்தை பார்த்தார். அந்த படமும், தனது உருவமும் ஒத்துப்போவதை கண்டுபிடித்தார். இதை தொடர்ந்து அவரது டிஎன்ஏ சோதனை செய்யப்பட்டது. அப்போது பழங்கால மனிதனின் டிஎன்ஏவும், அட்ரியன் டிஎன்ஏவும் ஒத்துப்போவதை கண்டுபிடித்தனர். மேலும் இரு டிஎன்ஏவும் தாய்வழி உறவு வகையை சேர்ந்தது என்பதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அட்ரியன் கூறுகையில், ‘‘இப்போது நான் ஒரு பாரம்பரியம் மிக்க கலாச்சார குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பதை உணர முடிகிறது. குடும்ப உருவ ஒற்றுமை இதில் காண முடிகிறது. எனக்கும் அதே மூக்கு உள்ளது. மேலும் எங்கள் கண்கள் நீல நிறம்தான். மேலும் என் உறவினர்களிடமும் இதே போன்ற உருவ ஒற்றுமை உள்ளது. அதோடு முடிகூட சுருள் வடிவில்தான் எனக்கும் உள்ளது. என் நிறத்தில் சாம்பல் நிறம் கூடுதலாக உள்ளது’’ என்றார்.