ராஜாஜி, காமராஜர், முத்துராமலிங்க தேவர், அம்பேத்கர் வரிசையில் முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், தமிழக சட்டசபையில் அவரது உருவப்படத்தை தமிழக அரசு இன்று ( 12 ம் தேதி) திறந்தது. இதற்கு தி.மு.க.,-பா.ம.க.,-தே.மு.தி.க.,-கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பா.ஜ., மட்டும் ஆதரவு கொடுப்பதால் அரசியலில் கலகலப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா பிறந்த நாள் விழா வரும் 24ல் அ.தி.மு.க.,வினரால் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, கட்சி அலுவலகத்தில் அவரது உருவச்சிலை திறக்கப்படுகிறது. அதே நாளில் சட்டசபையில் ஜெ., உருவப்படத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க அ.தி.மு.க., தலைமை விரும்பியது. ஆனால், பிரதமர் தரப்பில் இருந்து இதற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.இந்நிலையில், தினகரன் அணியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.,க்களின் தகுதி நீக்கத்தை எதிர்த்தவழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது.
தீர்ப்பின் முடிவு ஆளுங்கட்சிக்கு பாதகமானால் முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்குசிக்கல் ஏற்படும்.அதேபோல, அரசு அலுவலகங்களில் ஜெ., உருவப்படம் வைக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க., தொடுத்துள்ள வழக்கும் இன்று விசாரணைக்கு வர உள்ளது. இந்த சிக்கலான சூழலில், தமிழக அரசு இன்று ஜெ., உருவப்படம் திறக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளது.
தமிழக சட்டசபையில் முன்னாள் முதல்வர்கள், ராஜாஜி, காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., மற்றும்
முத்துராமலிங்க தேவர், சட்ட மேதை அம்பேத்கர் ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர்களின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளன. அந்த வரிசையில் முதல்வராக இருந்து மறைந்த ஜெ.,க்கு மரியாதை அளிக்கும் வகையில் அவரது உருவப்படம் சட்டசபையில் இன்று காலை 9:30 திறந்து வைக்கப்பட்டது.
முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில், சபாநாயகர் தனபால், ஜெ., உருவப்படத்தை திறந்து வைத்தார்.
போர்க்கொடி
அதேநேரத்தில், சட்டசபையில் ஜெ.,உருவப்படம் திறப்புக்கு, தி.மு.க., - பா.ம.க., - தே.மு.தி.க., - கம்யூ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இது குறித்து தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலின் கூறியதாவது:உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட ஜெ.,யின் உருவப்படத்தை சட்டசபையில் திறப்பது, சட்டவிதிகளுக்கு முரணானது; இது ஒரு கருப்பு நடவடிக்கை.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெ.,வையும் சேர்த்து நான்குபேர் குற்றவாளிகள் என, தெளிவாக தீர்ப்பு அளித்துள்ளனர். முதல் குற்றவாளியான ஜெ., இறந்து விட்டதால் சிறைக்கு செல்லவில்லையே தவிர குற்றவாளி என்பதில் மாற்றமில்லை. எனவே திறப்பு விழாவில், தி.மு.க., பங்கேற்காது. இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க., முதன்மை செயலர் துரைமுருகன் கூறுகையில், ''பிரதமர் மோடியை அழைத்து, ஜெ., உருவப்படத்தை திறக்க முதல்வர் பழனிசாமி அரசு, பல மாதங்களாக முயற்சி செய்தது; மோடி அதை ஏற்கவில்லை. இதனால், அவசர அவசரமாக திடீரென படத்திறப்பு விழாவை நடத்துகின்றனர்,'' என்றார்.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், 'சட்டசபையில், ஜெ., உருவ படத்தை திறக்கக்கூடாது. சொத்து குவிப்பு வழக்கில் ஜெ., முதல் குற்றவாளி என்பதை பார்க்க வேண்டும்,'' என்றார். பா.ம.க., இளைஞரணி மாநில தலைவர் அன்புமணி கூறுகையில், ''ஜெ., உருவ படத்திற்கு தடைகோரி, நீதிமன்றத்தை நாடுவோம்,'' என்றார்.
இந்நிலையில், ஜெ., உருவப்படத்தை திறக்கக்கூடாது என்ற மனுவை சட்டசபை செயலர் பூபதியிடம், தி.மு.க., - எம்.எல்.ஏ., - ஜெ., அன்பழகன், நேற்று தலைமை செயலகத்தில் வழங்கினார்.தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கூறுகையில், ''தமிழகத்தில் பலமுறை முதல்வராக இருந்தவர் என்ற முறையில், ஜெ., உருவப்படத்தை சட்டசபையில் திறக்கலாம்; அதில் தவறில்லை,'' என்றார். எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டி எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், பா.ஜ., மட்டும் ஆதரவு அளித்துள்ளது, அரசியலில் கலகலப்பை ஏற்படுத்தி உள்ளது.
கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜு கூறுகையில், ''ஜெ., ஆறு முறை முதல்வராக இருந்து தமிழகத்திற்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர். அவருக்கு மரியாதை அளிக்கும் வகையில், சட்டசபையில், அவரது உருவப்படத்தை திறப்பதில் தவறில்லை,'' என்றார்.
அகில இந்திய மகளிர் காங்., பொதுச்செயலர் விஜயதாரணி எம்.எல்.ஏ., கூறியதாவது: ஜெயலலிதா உருவப்படம் சட்டசபையில் திறக்கப்படுவதை நான் எதிர்க்கவில்லை; மனதார வரவேற்கிறேன். பெண் என்ற முறையில் அவர் கடினமான அரசியல் பாதையைக் கடந்து வந்தவர். மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர்; அவருக்கு மரியாதை கொடுப்பதில் தவறில்லை. கீழ் கோர்ட்டில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலும், உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வுக்கு தன்னை ஆட்படுத்திக்கொள்ள அவர் உயிருடன் இல்லை. ஜெ., அறிமுகம் செய்த தொட்டில் குழந்தைகள் திட்டம், அம்மா உணவகம், அரசின் இலவச கல்வி திட்டத்தில் ஆங்கில வழிக் கல்வி போன்ற திட்டங்கள், மற்ற மாநிலங்களிலும் பின்பற்றப் படுகிறது. ஆனால், விழாவில் நான் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (33)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply