சூளகிரி வனத்தில் 40 யானைகள் முகாம் ஒற்றை யானை தாக்கி விவசாயி படுகாயம்

2018-02-11@ 06:56:58

சூளகிரி: சூளகிரி வனப்பகுதிக்கு மீண்டும் வந்துள்ள 40 யானைகளில் இருந்து பிரிந்த ஒற்றை யானை தாக்கியதில், விவசாயி படுகாயமடைந்தார். இந்த சம்பவத்தால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே போடூர்பள்ளம் வனப்பகுதியில் 11 யானைகள் முகாமிட்டு, பயிர்களை நாசம் செய்து வந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து, மேலும் 29 யானைகள் வந்ததால், யானைகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. இந்த யானைகள் ஒன்றிணைந்து ராமாபுரம் பகுதியில் தக்காளி தோட்டத்தையும், பார்த்தக்கோட்டாவில் மாந்தோப்பில் புகுந்து மாமர கிளைகளை முறித்தும், அருகாமை தோட்டத்தில் இருந்த மிளகாய் செடிகளை மிதித்தும் நாசம் செய்தன.  இந்த யானைகள் மீண்டும் போடூர்பள்ளம் வனப்பகுதிக்கு சென்ற நிலையில், ஒரு யானை மட்டும் தனியாக பிரிந்து அதே பகுதியில் சுற்றித்திரிந்தது. சூளகிரி பகுதியில், கடந்த வாரம் ஒற்றை யானை 3பேரை பலி வாங்கிய நிலையில், தற்போது மேலும் ஒரு யானை நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதிக்குள்ளாகினர். இரவு நேரங்களில் வெகு சீக்கிரமாக வீடுகளுக்குள் முடங்கினர். இதனிைடயே, நேற்று காலை 5.30 மணியளவில், பிள்ளைக்கொத்தூர் பகுதியில் இருந்த ஒற்றை யானை, அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ராமப்பா என்பவரை வழிமறித்து தாக்கியது. இதில், காலில் படுகாயமடைந்த அவர் வலியால் துடித்தார். சத்தம் கேட்டு கிராம மக்கள் அங்கு விரைந்தனர். அவர்களை கண்டதும் ஒற்றை யானை அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. காயமடைந்த ராமப்பாவை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒற்றை யானையை விரட்டும் பணியில், 15 பேர் கொண்ட வனக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

ராகி, சோளப்பயிர் நாசம்
தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் வனப்பகுதியில், 30 யானைகள் கடந்த ஒரு மாதமாக முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் லக்கசந்திரம், மாரசந்திரம், மரகட்டா, நொகனூர், தாவரக்கரை, மலசோனை, கண்டகானப்பள்ளி, கேரட்டி உள்ளிட்ட பகுதிகளில்  ராகி, தக்காளி, கொள்ளு, முட்டைகோஸ், வாழை, தென்னை பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. நேற்று முன்தினம் இரவு தேன்தின்னனூர் கிராமத்தில் நாகராஜ் என்பவர் தோட்டத்தில் ராகி, மக்காசோள பயிர்களை நாசம் செய்து சென்றன. இந்த யானைகளை விரட்ட சிறப்பு குழு அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!