விஷவாயு தாக்கி தொழிலாளி பலி

2018-02-11@ 01:15:47

பெரம்பூர்: கொளத்தூர் பகுதி 64வது வார்டுக்கு உட்பட்ட பூம்புகார் நகரில் உள்ள குடிநீர் குழாய்கள் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் அப்பகுதிக்கு சப்ளை செய்யப்படும் குடிநீரை நிறுத்துவதற்காக ரெட்டேரி அருகே உள்ள குடிநீர் குழாய் வால்வை மூடும் பணியில்  ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டு வந்தனர். அதன்படி, நேற்று மதியம் 1 மணியளவில் திருவண்ணாமலையை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் சம்பத் (35), தொட்டியில் இறங்கியுள்ளார். இறங்கிய சம்பத் மயங்கிய நிலையில் தொட்டியில் சாய்ந்தார். அதை தொடர்ந்து பொன்னுசாமி என்பவரின் மகன் முருகன், சம்பத்தை காப்பாற்ற இறங்கியுள்ளார். அவருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

உடனே, அருகில் இருந்தவர்கள் சத்தம் போட்டு உதவிக்கு அழைத்துள்ளனர். அங்கிருந்த போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரம் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் இரண்டு பேரையும் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சம்பத் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். முருகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!