‘துபாயில் பண மோசடி’ மகன்களால் சிக்கலில் தவிக்கும் கேரள மார்க்சிஸ்ட் செயலாளர்

2018-02-11@ 00:48:34

திருவனந்தபுரம்: கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரான கோடியேரி பாலகிருஷ்ணனுக்கு பினோய், பினீஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் இளையவரான பினீஷ் ஒரு சில மலையாள படங்களில் தலைகாட்டியுள்ளார். மூத்தவர் பினோய் துபாய் உட்பட சில நாடுகளில் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.   இந்த நிலையில் தான் சமீபத்தில் கோடியேரி பாலகிருஷ்ணனின் மூத்த மகன் பினோய் துபாயில் ஒரு நிறுவனத்திலிருந்து கடன் வாங்கி 13 கோடி மோசடி செய்ததாகவும், அவர் மீது துபாய் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாயின. ஆனால் கோடியேரி பாலகிருஷ்ணன் தனது மகன் பினோய் மீது துபாயில் எந்த வழக்கும் இல்லை இதுதொடர்பாக அவருக்கு துபாய் நீதிமன்றமே சான்றிதழ் கொடுத்துள்ளது என்றும் கூறினார்.  ஆனால் அடுத்த ஒரு சில நாட்களில் கேரளாவுக்கு வருவதற்காக துபாய் விமானநிலையத்திற்கு வந்த பினோயை போலீசார் தடுத்து நிறுத்தினர். மோசடி வழக்கு நிலுவையில் இருப்பதால் அந்த வழக்கு முடியும் வரை துபாயை விட்டு வெளியேற முடியாது என்று கூறி அவரை திருப்பி அனுப்பினர்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரின் மகன் எவ்வளவு பெரிய பிரச்னையில் சிக்கியுள்ளார் என்ற விவரம் வெளிஉலகத்திற்கு தெரியவந்தது. இந்த சமயத்தில் சட்டசபை கூட்டத்தொடரும் நடைபெற்று வருவதால் தினமும் சபையில் கோடியேரி பாலகிருஷ்ணனின் மகனை குறித்த கேள்விகளைக் கேட்டு பினராய் விஜயனுக்கு எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன.
சபைக்கு சம்பந்தமில்லாத ஒருவர் குறித்து கேள்வி கேட்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று முதல்வர் பினராய் விஜயன் சமாளித்தும் எந்த பலனும் ஏற்படவில்லை.  மூத்த மகனால் ஏற்பட்ட பிரச்னை ஒரு புறமிருக்க, மறுபுறம் இளைய மகன் பினீஷ் மீதும் துபாயில் மோசடி வழக்கு இருப்பதாகவும், அவருக்கு துபாய் நீதிமன்றம் 2 மாத தண்டனை அளித்திருப்பதாகவும் தகவல் வெளியானது அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பினீஷும் துபாயில் பல கோடி கடன் வாங்கி அதை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி ஊருக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கடன் கொடுத்த நிறுவனம் போலீசில் புகார் கொடுத்ததால் பினீஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தான் பினீஷுக்கு துபாய் நீதிமன்றம் 2 மாதம் சிறைத் தண்டனை விதித்தது.
இதனால் பினீஷ் எப்போது துபாய் சென்றாலும் அடுத்த நிமிடமே அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.  இந்த 2 மகன்களால் ஏற்பட்ட பிரச்னைகளை மார்க்சிஸ்ட் செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணனும், முதல்வர் பினராய் விஜயனும் எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!