காஷ்மீரில் அதிகாலையில் ராணுவ முகாமில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல்: 2 வீரர்கள் பலி; 6 பேர் காயம்

2018-02-11@ 00:57:47

ஜம்மு: காஷ்மீரில் உள்ள சஞ்சவான் ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நேற்று அதிகாலை நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் கொல்லப்பட்டனர். நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கில் போடப்பட்ட தீவிரவாதி அப்சல் குருவின் 5வது நினைவு தினத்தை நேற்று முன்தினம் காஷ்மீர் பிரிவினைவாதிகள் அனுசரித்தனர். இதை முன்னிட்டு, ராணுவ முகாம்கள் மீது பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. எச்சரித்தபடியே, காஷ்மீரில் உள்ள சஞ்சவான் ராணுவ முகாம் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் நேற்று அதிகாலை புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த முகாமின் அருகில் உள்ள ராணுவ குடியிருப்பின் வழியாக நள்ளிரவில் ரகசியமாக ஊடுருவிய தீவிரவாதிகள், யாரும் எதிர்பாராத வகையில் முகாம் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில், மதன்லால் மற்றும் முகமது அஷ்ரவ் என்ற 2 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், ராணுவ அதிகாரி, வீரர்கள் மற்றும் ராணுவ வீரர் ஒருவரின் மகள் உட்பட 6 ேபர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே முகாமுக்கு அருகில் பதுங்கியுள்ள தீவிரவாதிகள் தொடர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறுகையில், “தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் எண்ணிக்கை தெரியவில்லை. ஆயினும் முதல்கட்ட தகவல்களின் அடிப்படையில் 3 முதல் 4 தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் இருந்து தப்பிய தீவிரவாதிகள் முகாமின் அருகில் பதுங்கி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். அவர்களை பிடிக்க தொடர் ேதடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது.

‘இந்தியரை தலைகுனிய வைக்க மாட்டார்கள்’
ராணுவ தாக்குதல் முகாம் குறித்து அகமதாபாத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று அளித்த பேட்டியில், ‘‘தாக்குதல் நடத்தப்பட்ட முகாமில், தீவிரவாதிகளை தேடும் பணி நடந்து வருகிறது. அது முடிந்த பிறகுதான் கருத்து தெரிவிக்க முடியும். பாதுகாப்பு படையினர் தங்கள் கடமையை மிகவும் பொறுப்புடன் செய்து வருகின்றனர். அவர்கள் எந்த இந்தியரையும் தலைகுனிய வைக்க மாட்டார்கள். ஜம்மு நிலவரம் குறித்து மாநில டிஜிபி விளக்கியுள்ளார். அங்குள்ள நிலைமையை உள்துறை அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது’’ என்றார்.

விமானப்படை விரைந்தது
ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், ராணுவத்தின் தாக்குதலில் இருந்து தப்பி விட்டனர். அவர்கள் அருகில் மலைப் பகுதிகள் அல்லது குடியிருப்பு பகுதிகளில் பதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவர்களை பிடிப்பதற்கு ராணுவத்துக்கு உதவி செய்வதற்காக விமானப்படை பிரிவும் அங்கு விரைந்துள்ளது.

பாக்.ராணுவம் தாக்குதல்
ஜம்மு காஷ்மீர் எல்லையில் உள்ள சர்வதேச எல்லை மற்றும் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில், இந்த ஆண்டு மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளனர். 75 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் பாதுகாப்பு படையினர் 10 பேரும், பொதுமக்கள் 8 பேரும் அடங்குவர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் அருகேயுள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நேற்று காலை 11 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. சிறுரக பீரங்கிகளை கொண்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் காதி கர்மாரா பகுதியில் குண்டுகள் விழுந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இதேபோல் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சகான் தாபாக் பகுதியிலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக அவர் தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!