பேச்சுவார்த்தை நடத்த தென்கொரிய அதிபருக்கு வடகொரியா அழைப்பு: யுன் கடிதத்தை சகோதரி அளித்தார்

2018-02-11@ 00:42:39

சியோல்: பேச்சுவார்த்தை நடத்த தனது நாட்டுக்கு வருகை தரும்படி தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னுக்கு   வடகொரிய அதிபர் கிம் ஜங் யுன் அழைப்பு விடுத்துள்ளார். சர்வதேச நாடுகள், ஐநா ஆகியவற்றின் கண்டனங்களையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதால், தென்கொரியா - வடகொரியா இடையே பதற்றம் நிலவி வருகிறது. தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது.  வடகொரியாவுக்கு சவால் விடும் வகையில், அமெரிக்க -  தென்கொரிய ராணுவங்கள் அடிக்கடி கூட்டுப் பயிற்சி செய்து வருகின்றன.
இந்நிலையில், தென்கொரியாவில் நேற்று முன்தினம் தொடங்கிய குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வடகொரியா விருப்பம் தெரிவித்தது. தென்கொரிய அரசு இதற்கு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, வடகொரிய அதிபர் கிம் ஜங் யுன்னின் சகோதரி கிம் யோ ஜங் அந்நாட்டுக்கு சென்றுள்ளார். கொரிய போர் முடிந்து 74 ஆண்டுகளுக்குப் பிறகு வடகொரிய அதிபரின் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தென்கொரியா சென்றது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

குளிர்கால ஒலிம்பிக் போட்டியை தொடங்கி வைத்த தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், வடகொரிய அதிபரின் தங்கை கிம் யோ ஜங்குக்கு ராஜமரியாதை அளித்து வரவேற்றார். அவருடனும், வடகொரிய குழுவுக்கு தலைமையேற்று வந்துள்ள கிம் யங் நம்முடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பு குறித்து மூனின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “இந்த சந்திப்பின்போது வடகொரிய அதிபர் கொடுத்தனுப்பிய கடிதத்தை தென்கொரிய அதிபரிடம் கிம் யோ ஜங் அளித்தார். அதில், கொரிய நாடுகளின் உறவை பலப்படுத்த அதிபர் யுன் விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும், தனது நாட்டுக்கு வருகைத் தரும்படி தென்கொரிய அதிபர் மூனுக்கு அவர் அழைப்பும் விடுத்துள்ளார்” என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!