வாணியம்பாடி: வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மகும்பலால் கடத்தப்பட்ட தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் செந்தில்குமார், 50 லட்சம் கொடுத்து மீட்கப்பட்டார். தாளாளரை கடத்திய கும்பலை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். கடத்தப்பட்ட தாளாளரின் பள்ளியில் கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றிய ஆசிரியை பிரியா மற்றும் அவரது கணவர் அரி ஆகியோர் சதித்திட்டம் தீட்டி கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றி 50 லட்சம் பறித்தது தெரியவந்தது. இதற்கிடையே அரி, சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்தார். வாணியம்பாடி போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரித்தனர். மேலும், அரியின் மனைவி பிரியாவையும் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில், தாளாளரிடம் பெறப்பட்ட பணத்தை அரி, தனது முதல் மனைவி நதியா, 2வது மனைவி பிரியா மற்றும் திருச்சி, தஞ்சாவூர், கோவில்பட்டி, சென்னை ஆகிய பகுதிகளில் உள்ள தனது உறவினர்களிடம் கொடுத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்களிடம் இருந்து 25 லட்சம், கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு கார், 2 இருசக்கர வாகனம் ஆகியவற்றை மீட்டனர். மேலும், அரியின் நண்பரான சென்னை செங்குன்றத்தை சேர்ந்த உதய் என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.