அபுதாபி : வளைகுடா நாடான, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கும் எண்ணெய் துரப்பனப் பணியில், 10 சதவீதம் பங்கு கிடைக்கும் வகையிலான முதலீடு செய்யும் ஒப்பந்தம் உட்பட, ஐந்து ஒப்பந்தங்கள், பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தின்போது கையெழுத்தாகின.
பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாடுகளுக்கு நான்கு நாள் பயணமாக சென்றுள்ளார். ஜோர்டான், பாலஸ்தீனத்தை அடுத்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டார்.நேற்று முன்தினம் அபுதாபிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை, அபுதாபியின் பட்டத்து இளவரசர், மொகமத் பின் ஜாயத் அல் நாயான் மற்றும் அரச குடும்பத்தினர் விமான நிலையத்தில் நேரில் வரவேற்றனர்.
மோடியும், பட்டத்து இளவரசர் நாயானும், கட்டித் தழுவி தங்களுடைய அன்பை பகிர்ந்தனர்.பிரதமர் மோடி இரண்டாவது முறையாக, யு.ஏ.இ.,க்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். இதற்கு முன், 2015 அக்டோபரில் அவர் பயணம் செய்தார்.
இருதரப்பு உறவுகள் பட்டத்து இளவரசர், நாயானை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்தார். அப்போது, இரு தரப்பு உறவுகள் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.அதைத் தொடர்ந்து, இரு தரப்பு அதிகாரப்பூர்வமான பேச்சு நடந்தது. இதில், ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அதில் முக்கியமாக, அபுதாபிக்கு அருகே உள்ள துரப்பனப் பகுதியில் எடுக்கப்படும் கச்சா எண்ணெயில், 10 சதவீதம் இந்தியாவுக்கு கிடைக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஓ.என்.ஜி.சி., எனப்படும், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வாரியத்தின் வெளிநாட்டு அமைப்பான, ஓ.வி.எல்., இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்.
மேலும், பாரத் பெட்ரோலியம் நிறுவனம் ஆகியவை இணைந்த இந்திய எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பும், அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனமும் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இதன்படி, இந்தாண்டு மார்ச் மாதம் முதல், 2057ம் ஆண்டு வரை, 40 ஆண்டுகளுக்கு, இந்தியாவுக்கு அங்கு உற்பத்தியாகும் எண்ணெயில், 10 சதவீதம் கிடைக்கும்.
இந்தியாவில் முதலீடு
அங்கு, தற்போது ஒருநாளில், நான்கு லட்சம் பேரல் எண்ணெய் எடுக்கப்படுகிறது. அதன்படி,ஆண்டுக்கு, இந்தியாவுக்கு, 20 லட்சம் டன் எண்ணெய் கிடைக்கும்.எண்ணெய் வளமிக்க நாடுகளில், எண்ணெய் துரப்பன பணியில் இந்தியா முதல் முறையாக முதலீடு செய்யும்ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதைத் தவிர, மனிதவள மேம்பாட்டு துறையில் ஒத்துழைப்பு, ரயில்வே திட்டங்களில் தொழில்நுட்ப உதவி, நிதித் துறையில் ஒத்துழைப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. இதைத் தவிர, அந்த நாட்டின், 'டிபி வோர்ல்ட்' நிறுவனத்துடன், ஜம்மு - காஷ்மீர் மாநில அரசுஒப்பந்தம் செய்துள்ளது.
அதன்படி, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அதிநவீன கிடங்குகள், வசதிகளை அந்த நிறுவனம் அமைக்கும். இதற்காக பல, லாஜிஸ்டிக்ஸ் பூங்காக்களை அந்த நிறுவனம் அமைக்க உள்ளது.யு.ஏ.இ., பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி, அடுத்ததாக மேற்காசிய நாடான ஓமனுக்கு சென்றார்.
இந்தியர்கள் இடையே பிரதமர் மோடி பேச்சு
யு.ஏ.இ.,யில், 30 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். அபுதாபி பட்டத்து இளவரசருடனான சந்திப்புக்குப் பின், இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.அப்போது அவர் பேசியதாவது:யு.ஏ.இ., உட்பட வளைகுடா நாடுகளுடனான உறவு, பெட்ரோல் பொருட்களை வாங்குவது, விற்பது என்ற அளவுக்கே இருந்தது.
முதல் முறையாக நாம் முதலீடு செய்துள்ளோம்; இது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மிகவும் ஆழமாகவும், விரிவாகவும், துடிப்புடன் உள்ளதை காட்டுகிறது.உலக வங்கியின் தரவரிசையின்படி, தொழில் செய்வதற்கான மிகச் சிறந்த
நாடுகள் பட்டியலில், 142வது இடத்தில் இருந்து, 100வது இடத்துக்கு முன்னேறியுள்ளோம். ஆனால், நாங்கள் திருப்தி அடையவில்லை. இன்னும் சிறப்பாக செயல்பட அனைத்து நடவடிக்கையும் எடுப்போம்.இவ்வாறு அவர் பேசினார்.
அபுதாபியில் நடந்த, உலக அரசுகள் மாநாட்டில் மோடி பேசியதாவது: தொழில்நுட்ப வளர்ச்சி என்பது, நாட்டின் வளர்ச்சிக்கானதாக இருக்க வேண்டும்; அழிவை ஏற்படுத்தக் கூடாது. சைபர் குற்றங்களை தடுக்க அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
சுவாமிநாராயண் கோவிலுக்கு அடிக்கல்
முஸ்லிம் நாடான யு.ஏ.இ.,யின் அபுதாபியில் அமைய உள்ள முதல் ஹிந்து கோவிலான சுவாமிநாராயண் கோவிலுக்கான அடிக்கல்லை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டினார்.
இந்திய வம்சாவளியினர் இடையே நடந்த சந்திப்பின்போது, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், கோவிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: கோவில்கள் என்பது மனிதநேயத்தையும், இணக்கத்தையும் உணர்த்துவன. நம் நாட்டின் மீதுள்ள மிகுந்த மரியாதையில், இந்தக் கோவிலுக்கு, யு.ஏ.இ., அனுமதி அளித்துள்ளது. நம் கலாசார வரலாற்றுக்கு பெருமை சேர்க்கும் வகையில், இந்த கோவில் அமைய வேண்டும்.
அனுமதி அளித்த பட்டத்து இளவரசருக்கு, 125 கோடி இந்தியர்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கோவில், இந்தியாவின் அடையாளத்தை உணர்த்துவதாக இருக்க வேண்டும்.இவ்வாறு மோடி குறிப்பிட்டார்.
பி.ஏ.பி.எஸ்., எனப்படும்,'பேச்சசன்வாஸி ஸ்ரீ அக் ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா' என்ற சமூக, ஆன்மிக ஹிந்து அமைப்பு சார்பில் இந்தக் கோவில் அமைக்கப்பட உள்ளது.இந்த அமைப்பின் சார்பில், டில்லியில் உள்ள சுவாமி நாராயண் கோவில் உட்பட, உலகெங்கும், 1,௦௦௦க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.
துபாய் - அபுதாபி நெடுஞ்சாலையில், அமைய உள்ள இந்தக் கோவில், வரும், 2020க்குள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கான நிலம் இலவசமாக தரப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (4)
Reply
Reply
Reply
Reply