குரூப்-2 தேர்வு விண்ணப்பத்தை பூர்த்தி செய்தபோது பிறந்த தேதியில் பிழை வன ஊழியர் வழக்கு

2018-02-11@ 00:49:23

சென்னை: குரூப்-2 தேர்வுக்கான விண்ணப்பத்தில் பிறந்த தேதியை எழுதும்போது தவறாக குறிப்பிட்டதால் நேர் முகத் தேர்வுக்கு அழைக்கப்படாத பெண் வன உதவியாளரை நேர்முகத் தேர்வுக்கு அழைக்குமாறு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு வனத்துறையில் உதவியாளராக பணியாற்றி வருபவர் டி.அமுதினி. இவர் கடந்த 2015 ஜூலை 26ம் தேதி நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் பங்கேற்பதற்கான விண்ணப்பத்தில் தனது பிறந்தநாள் 06-02-93 என்று எழுதுவதற்கு பதிலாக தவறுதலாக 06-12-93 என்று குறிப்பிட்டுள்ளார். முதல் நிலை தேர்வில் அவர் தேர்ச்சி பெற்றதால் பிரதான தேர்வையும் எழுதி தேர்ச்சி பெற்றார். ஆனால், அவரை நேர்முகத் தேர்வுக்கு டிஎன்பிஎஸ்சி அழைக்கவில்லை. அதற்கான காரணத்தைக் கேட்டபோது விண்ணப்பத்தில் பிறந்த தேதியை தவறாக குறிப்பிட்டுள்ளதால் தேர்வு அறிவிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின் படி அவர் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள முடியாது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்தது.

இதையடுத்து, தன்னை நேர்முகத் தேர்வுக்கு அழைக்குமாறு டிஎன்பிஎஸ்சிக்கு உத்தரவிடக்கோரி அமுதினி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமுதினி சார்பில் ஆஜரான வக்கீல் யுஎம்.ரவிச்சந்திரன் வாதிடும்போது,  விண்ணப்பத்தில் பிறந்தநாளை தவறாக குறிப்பிட்டுள்ளது தவறு என்றாலும் அவரது சான்றிதழ்களில் பிறந்த தேதி சரியாக உள்ளது.
 கவனக்குறைவால் இந்த தவறு ஏற்பட்டுள்ளது. அவர் பணியாற்றும் துறையில் எந்த துறைரீதியான எந்த நடவடிக்கையும் அவர் மீது இல்லை என்று தலைமை வனக்காப்பாளர் சான்றிதழ் கொடுத்துள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த அர்சித் கபூர் என்பவர் அந்த மாநில வேலைவாய்ப்புக்கான தேர்வு விண்ணப்பத்தில் கவனக்குறைவாக 17-09-98 என்று குறிப்பிடுவதற்கு பதிலாக 07-09-1998 என்று குறிப்பிட்டதால் அவரை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கவில்லை என்பதால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், கவனக்குறைவால் ஏற்பட்ட தவறு என்பதால் அர்சித் கபூருக்கு பணி வழங்க உத்தரவிட்டது.
இதே பிரச்னைதான் இந்த வழக்கிலும். கவனக்குறைவாக நடந்த தவறால் மனுதாரரின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

அதற்கு டிஎன்பிஎஸ்சி சார்பில் ஆஜரான வக்கீல் லோகநாதன் வாதிடும்போது, தவறான தகவலை தந்தால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்று தேர்வுக்கான அறிவிப்பாணையில் உள்ளது. அதன் அடிப்படையில் மனுதாரரை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கவில்லை என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர், மீது அவர் பணியாற்றும் துறையில் எந்த ஒழுங்கு நடவடிக்கையும் இல்லை. கவனக்குறைவாக விண்ணப்பத்தில் தனது பிறந்தநாளைக் குறிப்பிட்டுள்ளார். இதேபோன்ற வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் வழங்கியுள்ளது. எனவே, மனுதாரரை நேர்முகத் தேர்வுக்கு அழைக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சிக்கு உத்தரவிடப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!