அரசியலில் ரஜினிகாந்துடன் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை: ரஜினியின் ஆன்மிக அரசியல் காவி அரசியலாக இருக்காது: நடிகர் கமல்

2018-02-11@ 09:43:45

நியூயார்க்: அரசியலில் ரஜினிகாந்துடன் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை என்று நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பஙகேற்றார். தமிழில் வணக்கம் என்று கூறி உரையை தொடங்கிய அவர் அரசியலுக்கு வரவேண்டிய கட்டாயம் தமக்கு வந்துவிட்டதாக கூறினார். கிராமத்தில் இருந்து மாற்றத்தை தொடங்குவதாக குறிப்பிட்ட அவர் இந்த மாற்றத்திற்கு அனைவரின் பங்களிப்பு அவசியம் என்றார். தாமும் ரஜினியும் நண்பர்களாக இருக்கலாம் ஆனால் இருவரின் பாதைகள் வேறு என்பதால் கூட்டணி அமைத்து செயல்பட வாய்ப்பு இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். ரஜினியின் ஆன்மிக அரசியல் காவி அரசியலாக இருக்காது என நம்புகிறேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது: எனது அரசியல் கொள்கையின் நிறம் கருப்பு. நான் சைவம் அல்ல. மாட்டுக்கறி சாப்பிட மாட்டேன். அதற்காக மற்றவர்களை மாட்டுக்கறி சாப்ப்பிடக் கூடாது எனவும் சொல்ல மாட்டேன். மக்கள் இதைத்தான் சாப்பிட வேண்டும் என அரசு சொல்லக்கூடாது. எனக்கு என்ன வேண்டும் என தேர்வு செய்வது எனது உரிமை. அதனை பிறர் தீர்மானிக்கக் கூடாது.

ஒரு கல்லூரி விழாவில் கையெழுத்திட்டு என்னை அரசியல்வாதி என அறிவித்துக் கொண்டேன். இந்த விழாவில் இரண்டாவது முறையாக என்னை அரசியல்வாதி என அறிவித்துக் கொள்கிறேன். தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கவில்லை எனில் அடுத்த தேர்தலுக்காக காத்திருப்பேன். எனது கட்சி தனி மனித கட்சி அல்ல. 2, 3, 4-வது கட்ட தலைவர்களும் இருப்பார்கள். தமிழன் என்பது முகவரி தான், தகுதி அல்ல இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் கூறயுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!