'குரூப் - 4' தேர்வில் ஜவஹர்லால் நேரு மற்றும் ரவீந்திரநாத் தாகூர் குறித்த இரண்டு கேள்விகளுக்கு சரியான விடைக்குறிப்பு வழங்கப்படவில்லை என்பதால் தேர்வர்கள் குழப்பமடைந்தனர்.
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள 9,351 பணியிடங்களை நிரப்ப நேற்று குரூப் - 4 தேர்வு நடந்தது. இதில் 17.53 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வில், தலா ஒன்றரை மதிப்பெண் வீதம் 200 கேள்விகள் இடம் பெற்றன. வினாக்களுக்கு நான்கு விடைக்குறிப்புகள் வழங்கி, அதில் சரியானதை தேர்வுசெய்யும் 'அப்ஜெக்டிவ்' வகை வினாத்தாள் வழங்கப்பட்டது.
இதில், இந்திய தேசிய கீதத்தை எழுதிய ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள் எப்போது என்ற கேள்வி இடம் பெற்றது. அவர் பிறந்த நாளான, மே 7, 1861 என்ற விடையானது, நான்கு விடைக் குறிப்புகளிலும் இடம் பெறவில்லை. மே 17, 1861 என்ற விடைக்குறிப்பு இடம் பெற்றிருந்தது.மற்ற வினாக்கள் பெரும்பாலும் எளிமையாக இருந்தன.
ஆனால், ஒரு கேள்வியில் தமிழ் எழுத்துகளில் எண்கள் குறிப்பிடப்பட்டு, அதன் கூட்டு தொகை கேட்கப்பட்டது. அதற்கான விடைக் குறிப்பிலும் கூட்டு தொகை எண்ணானது தமிழ் எழுத்துகளாகவே இடம் பெற்றிருந்தது. அதனால் பெரும்பாலான மாணவர்கள் இந்த வினாவை தவிர்த்து விட்டதாக தெரிவித்தனர்.
முன்னாள் பிரதமர் நேரு சிறை வைக்கப்பட்ட அல்மோரா சிறை எந்த மாநிலத்தில் உள்ளது என்ற கேள்வி இடம் பெற்றது.
இதில், மேற்கு வங்கம், குஜராத், உத்தராஞ்சல் மற்றும் உத்தர பிரதேசம் என்ற, விடைக் குறிப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன. ஆனால், இதற்கான சரியான விடை உத்தரகண்ட் மாநிலம்.
உத்தரகண்ட் மாநிலம் 2000ம் ஆண்டுக்கு முன் உத்தராஞ்சல் என அழைக்கப்பட்டது. தற்போதைய நிலையில் உத்தராஞ்சல் என்ற மாநிலம் அதிகாரப்பூர்வமாக இல்லை. எனவே தேர்வில் சரியான விடை இடம் பெறவில்லை என தேர்வர்கள் தெரிவித்தனர்.
விக்டோரியா மகாராணி காலையில் எழுந்ததும் படிக்கும் முதல் புத்தகம்; யோகா கொண்டாடப்படும் வாரம்; கண்ணதாசன் எழுதிய நாடகம் எது, துணை ஜனாதிபதி நியமன சட்டம், நிடி ஆயோக், மாலத்தீவு - இந்தியா ராணுவ ஒப்பந்தம் மற்றும் மின்சார வாரியம் துவங்கப்பட்ட ஆண்டு ஆகியவை குறித்தும் கேள்விகள் இடம் பெற்றிருந்தன.
'இதற்கான தோராய விடைக்குறிப்பு வெளியிடப்படும். அதில், ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம்' என டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
10ம் வகுப்பு முதல் இன்ஜி., படித்தவர் வரை போட்டி
நேற்று நடந்த 'குரூப் - 4' தேர்வில் 17.53 லட்சம் பேர் பங்கேற்றனர்.கிராம நிர்வாக அதிகாரியான வி.ஏ.ஓ., பதவிக்கு இதுவரை தனியாகத் தான் தேர்வு நடத்தப்பட்டது.ஆனால், இம்முறை குரூப் - 4 தேர்வில், முதன்முதலாக வி.ஏ.ஓ., பணியில் 494 காலி இடங்களும் சேர்க்கப்பட்டன. மேலும் இளநிலை உதவியாளர் 4,301; தட்டச்சர் 3,463 என எட்டு வகை பதவிகளில் 9,351 காலி இடங்களை நிரப்புவதற்காக இந்தத் தேர்வு நடந்தது.
மொத்தம் 6,962 தேர்வு மையங்களில், 20 லட்சத்து 69 ஆயிரத்து 274 பேர் தேர்வு எழுதும் வகையில் ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.ஆனால், தேர்வில் 17.53 லட்சம் பேர் மட்டுமே பங்கேற்றனர்; 3.16 லட்சம் பேர் தேர்வுக்கு வரவில்லை.தேர்வு கண்காணிப்பு பணியில் 1.03 லட்சம் பேர் ஈடுபட்டனர்.
இதுவரை நடந்த எந்த தேர்விலும் இல்லாத அளவில், ஒரு போட்டி தேர்வுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்து, அதில் 17 லட்சத்து 52 ஆயிரத்து 882 பேர் பங்கேற்றது சாதனையாக கருதப்படுகிறது.
தேர்வில் புது வசதி
'குரூப் - 4' தேர்வில் புதிய வசதியாக தேர்வர்களின் பெயர், புகைப்படம், பதிவு எண், விருப்ப பாடம் மற்றும் தேர்வு மையத்தின் பெயர் ஆகியவை தேர்வர்களின் விடைத்தாளில் அச்சிடப்பட்டிருந்தன. மேலும், தேர்வில் பதில் அளிக்காமல் விடுபடும் வினாக்களின் கட்டங்களை கணக்கிட்டு தேர்வரே எழுத வேண்டும் என்ற புதிய நடைமுறையும் அமல்படுத்தப்பட்டது.
வினாத்தாள் குறித்து தனியார் பயிற்சி மைய பேரா சிரியர் மாரிமுத்து கூறுகையில், ''பெரும் பாலான கேள்விகள் மிக எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் 3ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான பாடங்களிலிருந்து கேள்விகள் இடம் பெற்றிருந்தன. பெரிய அளவில் தேர்வர்களை நுணுக்கமாக சிந்திக்க வைத்து குழப்பும் கேள்விகள் இடம் பெறவில்லை,'' என்றார்.
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து