கணவன் 2வது திருமணம் செய்ததால் ரயில்முன் பாய்ந்து ஆசிரியை தற்கொலை

2018-02-11@ 06:44:06

ஜோலார்பேட்டை: வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த வெங்கடேஸ்வரா நகரை ேசர்ந்தவர் நாகேந்திரன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மனைவி செல்வமணி. ஓய்வுபெற்ற நர்ஸ். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களது மூத்த மகள் கவிதா(37), தனியார் பள்ளி ஆசிரியை. இவருக்கும் நாட்றம்பள்ளி தோப்பலகுண்டா பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன்(37) என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கவிதா கடந்த ஓராண்டுக்கும் மேலாக தாய் வீட்டில் வசித்து வந்தார். விடுமுறையில் அவ்வப்போது ஊருக்கு வரும் பிரபாகரன், மாமியார் வீட்டில் தங்கிவிட்டு செல்வாராம்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு காஷ்மீரில் இருந்து விடுமுறையில் வீடு திரும்பிய பிரபாகரன், வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டாராம். இதுகுறித்து தகவலறிந்த கவிதா, நேற்று முன்தினம் பிரபாகரனை தேடிச்சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். அதற்கு பிரபாகரன், ‘உன்னுடன் வாழ பிடிக்கவில்லை’ எனக்கூறினாராம். இதனால் மன வேதனையடைந்த கவிதா நேற்று முன்தினம் மாலை திருப்பத்தூர் காக்கங்கரை ரயில் நிலையங்களுக்கிடையே மொளகரம் பட்டி அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

காதலிக்காக காதலனும் தற்கொலை: பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி சின்னகுளிதிகை கிராமத்தை சேர்ந்தவர் ரகு(19).  இவர் குடியாத்தம் அரசுக்கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 2ம் ஆண்டு படித்து வந்தார்.  இவர் வேலூர் சேண்பாக்கம் பகுதியில் உள்ள தனது அத்தை மகள் ஹேமா என்பவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு ஹேமாயின் தாய், எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், இருவரும் போனில் பேசுவதையும் கண்டித்துள்ளார்.  இதனால் மனமுடைந்த ஹேமா, நேற்று  முன்தினம் தற்கொலை செய்து கொண்டார்.  இதுகுறித்த தகவல் அறிந்த ரகு, நேற்றுமுன்தினம் இரவு மேல்பட்டி- குடியாத்தம் இடையே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தார். இரு சம்பவங்கள் குறித்தும் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!