அதிகாரிகள் டார்ச்சரால் சோக முடிவு நெல்லையில் அரசு ஊழியர் தற்கொலை: கைக்குழந்தையுடன் மனைவி கதறல், டைரி சிக்கியது

2018-02-11@ 00:48:13

நெல்லை: உயர் அதிகாரிகள் டார்ச்சரால் அரசு ஊழியர் நெல்லையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நெல்லை  பாளையங்கோட்டையை சேர்ந்தவர் முத்துமாலை (37). நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சர்வேயர் ஆபீசில் நில வரைவாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கோமதி (31). இவர்களுக்கு மூன்றரை மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களாக முத்துமாலை, வேலைப்பளு அதிகமாக இருப்பதாக புலம்பி வந்துள்ளார். உறவினர்கள் கேட்டதற்கு, அலுவலகத்தில் நிம்மதியாக வேலை பார்க்க விடமாட்டார்கள் போல் தெரிகிறது. மேலதிகாரி தினமும் டார்ச்சர்  செய்து வருகிறார். வேலைப்பளு காரணமாக என்னால் என்ன செய்வதென்றே தெரியவில்லை  என்று கண்ணீர் வடித்துள்ளார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி  வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை 7 மணியளவில், வீட்டின் மாடியில் உள்ள  பாத்ரூமில் குளித்துவிட்டு வருவதாக கூறிச் சென்றுள்ளார். ஆனால் 9 மணி யாகியும் அவர் கீழே  இறங்கி வராததால் சந்தேகமடைந்த கோமதி மேலே சென்று பார்த்துள்ளனர்.  அங்கு மின்விசிறியில் அவர் வேட்டியில் தூக்குப்போட்டு சடலமாக தொங்கியதை கண்டு கதறினார். தகவலறிந்து பாளை.  போலீசார் விரைந்து சென்று முத்துமாலை உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எழுதியதாக கடிதம் எதுவும் சிக்கவில்லை. ஆனால் முத்துமாலை வழக்கமாக  எழுதும் டைரியை போலீசார் கைப்பற்றினர். அதில் உயரதிகாரிகள் டார்ச்சர், வேலைப்பளு குறித்து எதுவும் குறிப்பிட்டு உள்ளாரா?  என விசாரித்து வருகின்றனர்.

சம்பவம் குறித்து அவரது உறவினர்கள் கூறும்போது,  உயரதிகாரிகள் நெருக்கடியால்தான் அவர் இந்த விபரீத முடிவை  எடுத்துள்ளார். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை  எடுக்க வேண்டும், என்றனர். அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், இப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

உடலை வாங்க மறுத்து தர்ணா
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், முத்துமாலை உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மாலை 3.30 மணியளவில் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு நடந்தது. அப்போது அங்கு திரண்டிருந்த உறவினர்கள் மற்றும் விஸ்வகர்ம விடுதலை இயக்கத்தினர் தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். முத்துமாலை மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும், அவரது மனைவிக்கு அரசு வேலை, இழப்பீடு  வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். போலீசார் பேச்சுவார்த்தைக்குப்பின் தர்ணாவை கைவிட்டு உடலை பெற்றுச் சென்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!