சென்னை: டாஸ்மாக் ஊழியர்களின் பிரச்சனைகளை மக்களிடம் நேரடியாக எடுத்துசெல்லும் வகையில் டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சார்பில் 3 நாள் மக்கள் சந்திப்பு இயக்கத்தை நேற்று துவக்கியுள்ளனர்.
அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சட்டப்படியான சம்பளம், சலுகைகள் உள்ளிட்டவைகளை அமல்படுத்தாமல் உள்ளது. எனவே, டாஸ்மாக் ஊழியர்கள் தங்களின் கோரிக்கையை மக்களிடம் எடுத்துசெல்லும் வகையில் சென்னை தி.நகரில் இருந்து நேற்று முதல் வரும் 12ம் தேதி வரையில் மூன்று நாள் மக்கள் சந்திப்பு இயக்கத்தை தொடங்கி உள்ளனர். இந்த மக்கள் சந்திப்பு இயக்கத்தின் மூலம் நேரடியாக டாஸ்மாக் நிர்வாகத்தில் நடக்கும் பிரச்சனைகள், ஊழியர்களின் பிரச்சனைகள் உள்ளிட்டவைகளை கொண்டுசெல்ல இருக்கின்றனர்.
இதுகுறித்து சம்மேளனத்தின் பொதுசெயலாளர் திருசெல்வன் கூறியதாவது: டாஸ்மாக்கில் கிட்டத்தட்ட 30 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு சட்டப்படியான எந்த ஒரு சலுகையும் தரப்படுவது இல்லை. கொத்தடிமை முறை போன்று தான் டாஸ்மாக் நிறுவனம் இவர்களை நடத்தி வருகிறது. பல்வேறு தொழிலாளர் சட்டங்களுக்காக கடந்த 10 வருடமாக போராடி வருகிறோம். மறைமுக பார்களை அனுமதிப்பது, மக்கள் விரும்பாத மதுபானங்களை இறக்குமதி செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
இதுபோன்ற நிர்வாக முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த முறைகேடுகளை நாங்கள் கண்டிக்கிறோம். டாஸ்மாக்கில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு எந்த வித சட்டபாதுகாப்பும் இல்லை.
இதனால், ஊழியர்கள் நிம்மதி இழந்துபோய் காணப்படுகின்றனர். எனவே, எங்களின் கோரிக்கையை மக்களிடம் எடுத்துசெல்லும் வகையில் மக்கள் சந்திப்பு இயக்கத்தை தொடங்கியுள்ளோம். மேலும், வரும் தமிழக பட்ஜெட்டில் எங்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக அறிவிக்க வேண்டும். இல்லையேல், வரும் காலங்களில் டாஸ்மாக் தலைமை அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்துவோம். இதன் பிறகும் எங்களின் கோரிக்கை உதாசினப்படுத்தப்பட்டால் அனைத்து தொழிற் சங்கங்களையும் ஒன்றிணைத்து வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு கூறினார்.