சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: 2017ல் மத்திய அரசின் தேசியக் குற்றப்பதிவு ஆணையம் அளித்துள்ள புள்ளிவிவரப்படி நம் நாட்டில் உள்ள தென்மாநிலங்களில் நடைபெறும் குற்றச் செயல்களில் 2ம் இடத்தில் இருப்பது தமிழகத்தின் சென்னை மாநகரப் பகுதி என்பதை தமிழக அரசு முக்கிய கவனத்தில் கொள்ள வேண்டும். இதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த 2 தினங்களுக்கு முன்பு சென்னையில் ரவுடிகள் கூட்டிய கூட்டம் நடைபெற்றிருக்கிறது. இப்படி ரவுடிகள் ஒரு துணிச்சலான கூட்டத்தை சென்னையில் நடத்துவதற்கு தமிழக அரசின் சட்டம் ஒழுங்கின் மீது குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு பயம் இல்லை என்ற தன்மையை வெளிப்படுத்தியிருக்கிறது.
காவல்துறை காலம் தாழ்த்தாமல் தப்பி யோடிய ரவுடிகள் அத்தனை பேரையும் கைது செய்ய வேண்டும். குறிப்பாக சென்னையில் கூடிய ரவுடிகள் அனைவரையும் கைது செய்வதோடு, சட்டத்திற்கு உட்பட்டு அனைவருக்கும் உரிய தண்டனையை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு தலை மறைவாக இருப்பவர்களையும், குற்றச்செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருப்போரையும் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு அவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவும், தமிழக மக்களுக்கு பாதுகாப்பை தொடர்ந்து வழங்கவும் தமிழக அரசு அனைத்து கடுமையான நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.