சென்னை: ஜெ.தீபாவிடம் விசாரிக்க, அவரது வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிபோல வந்த ஆசாமி ஒருவன் சோதனை நடத்த முயன்றான். போலீசார் வந்ததும் தப்பி ஓடியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை நடத்தி வருகிறார். அவரது பேரவையில் பதவி கொடுப்பதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக, ஜெ.தீபா மற்றும் அவரது கார் டிரைவர் ராஜா மீது ஏராளமானோர் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், தி.நகர் சிவஞானம் சாலையில் உள்ள ஜெ.தீபா வீட்டுக்கு நேற்று காலை 6 மணியளவில் மித்தேஷ் குமார் என்பவர் வந்துள்ளார். அப்போது, அங்கிருந்த குடியிருப்பு காவலாளியிடம் தான் வருமான வரித்துறையில் உதவி கமிஷனராக பணிபுரிந்து வருவதாகவும் கூறியுள்ளார். அப்போது, அவர் தான் சோதனை நடத்த வந்ததாக கூறி ஒரு ஆவணத்தை காட்டினார். அதற்கு, அங்கிருந்தவர்கள் நீங்கள் மட்டும் வந்திருக்கிறீர்கள், மற்றவர்கள் எங்கே எனக் கேட்டனர்.
அப்போது, அந்த நபர் காலை 10 மணிக்கு மேல் மற்ற அதிகாரிகள் வந்த உடன் சோதனை துவங்கும் என்று கூறினார். அப்போது, தீபா கணவர் மாதவன் மட்டுமே வீட்டில் இருந்துள்ளார். இதை தொடர்ந்து அந்த நபரை மாதவன் உள்ளே அனுமதித்து உட்கார வைத்துள்ளார். தொடர்ந்து, மாதவன் உடனடியாக வழக்கறிஞருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த வழக்கறிஞர்கள் அந்த நபரிடம் உங்களது அடையாள அட்டையை காட்டுமாறு கேட்டனர். இதை தொடர்ந்து அந்த நபர் தான் கையில் இருந்த அடையாள அட்டையை அங்கிருந்தவர்களிடம் காட்டினார். தொடர்ந்து அந்த நபர், ஜெ. தீபா பேரவையில் பலரிடம் பதவி தருவதாக கோடிக்கணக்கில் பணம் பெற்று கொண்டு ஏமாற்றியதாக காவல்துறை ஆணையரிடம் புகார் வந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தவும், மேலும் பல கோடி ரூபாயை தீபா பதுக்கி வைத்திருப்பதாக வந்த புகாரின் பேரில் சோதனை நடத்தவும் வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால், சந்தேகம் அடைந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அப்போது, போலீசார் அந்த நபரிடம் போனில் பேசிய போது, அந்த நபர் போலீசாருக்கு சரியான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து ஜெ. தீபா வீட்டிற்கு உதவி ஆணையர் தலைமையில் போலீசார் வந்தனர். தி.நகர் உதவி ஆணையர் செல்வக்குமார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினார். அப்போது, போலீசாரிடம் அந்த நபர் முன்னுக்கு பின் முரணான தகவலை அளித்துள்ளார்.
போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவரது அடையாள அட்டையை காட்டுமாறு கூறினர். அப்போது, அந்த நபர் அடையாள அட்டையை எடுத்து உதவி ஆணையரிடம் கொடுத்தார். அப்போது, அடையாள அட்டையை வாங்கி உதவி ஆணையர் பார்த்து கொண்டிருக்கும் போது, திடீரென அந்த நபர் ஜெ. தீபா வீட்டின் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினார். அப்போது, அங்கு தயாராக நின்று கொண்டிருந்த ஆட்டோவில் ஏறி தப்பி சென்றார். போலீசாரும் அந்த நபரை பிடிக்க விரட்டி சென்றனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் விரட்டி வருவதை அறிந்த உடன் மின்னல் வேகத்தில் ஆட்டோ பறந்தது. தொடர்ந்து, அந்த ஆட்டோவை ஜீப், பைக்கில் போலீசார் விரட்டி சென்றனர். ஆனால், அதற்குள் அந்த ஆட்டோ மாயமானது. போலீசார் விரட்டி சென்றும் அந்த நபரை பிடிக்க முடியாமல் திரும்பினர்.
சமீபத்தில் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் வெளியானது. அந்த படத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல வேடமிட்டு சோதனை நடத்துவது போன்ற காட்சி இடம் பெற்று இருக்கும். அந்த படத்தை போன்று, வருமான வரித்துறை அதிகாரி எனக்கூறி ஒருவர் போலி அடையாள அட்டை காட்டியதோடு, வருமான வரி சோதனை நடத்துவதற்காக உத்தரவையும் காட்டி மோசடியில் ஈடுபட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாதவன் பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக ஜெ.தீபா கணவர் மாதவன் நிருபர்களிடம் கூறியதாவது: காலை 7 மணிக்கு ஒரு நபர் எனது வீட்டிற்கு வந்தார். யார் என்று விசாரித்தபோது, நான் வருமானவரித்துறையில் இருந்து வந்திருக்கிறேன், கமிஷனர் அலுவலகத்தில் உங்கள் மீது புகார் வந்துள்ளது. உங்களிடம் விசாரிக்க வேண்டும் என்றார். அவர் ஐடி கார்டை வாங்கி பார்த்த பின்னர் வீட்டிற்குள் அழைத்தேன். அதன்பிறகு எனது வக்கீலுக்கு தகவல் தெரிவித்தோம். அவர் போலீசாரை அழைத்து வந்தார்.
போலீஸ் வந்தவுடன் அந்த நபர் ஓடிவிட்டார். போலீசார் தான் அவரை துரத்தி சென்றனர். அந்த நபர் ஏன் வந்தார்? எதற்காக ஓடினார் என்று எனக்கு தெரியவில்லை. ஐடி கார்டை காண்பித்ததால் நான் அவரை சந்தேகப்படவில்லை. வீட்டில் நான் மட்டும் தான் இருந்தேன். தீபா சிகிச்சைக்காக வெளியே சென்றுள்ளார். அந்த நபர் என்னை மிரட்டவில்லை. விசாரிக்க வேண்டும் என்று தான் சொன்னார். அவரிடம், விசாரணை தொடர்பான உத்தரவு கடிதம் இருந்தது. அதில், பச்சை முத்திரையிட்டிருந்தது. போலீசாரிடம் அந்த கடிதத்தின் போட்டோ நகல் இருக்கும். அந்த நபர் பணம் பறிக்கும் நோக்கில் வந்தாரா என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் நடந்தது உண்மை. ஏற்கனவே, எங்கள் வீட்டில் கல் எறிந்ததாக நான் எந்த பொய்யான புகாரும் கொடுக்கவில்லை. தீபா கொடுத்தார் என்றால் அதை அவரிடம் தான் கேட்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.