சென்னை: சாலிகிராமத்தைச் சேர்ந்த நாச்சியப்பன் (66) என்பவருக்கு சொந்தமாக ஒரு இடம் உள்ளது. இந்த இடம் தனக்கு சொந்தமானது என்றும், அந்த இடத்தை கடந்த 2013 ஏப்ரல் 17ம் தேதி எஸ்.என்.பத்மநாபன் என்பவரிடமிருந்து 1.25 கோடிக்கு வாங்கியதாகவும், எனவே, அந்த இடத்தை தனக்கு வழங்குமாறு உத்தரவிட வேண்டும் எனக்கோரி இளவரசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாச்சியப்பன் சார்பில் ஆஜரான வக்கீல் எஸ்.தங்கசிவன் வாதிடும்போது, இடத்திற்கு உரிமையாளர் நாச்சியப்பன்தான். அந்த இடத்திற்கு போலியான ஆவணங்களை தயாரித்து இளவரசன் ெபயரில் பதிவு செய்ய பத்மநாபன் விருகம்பாக்கம் சார்பதிவாளரை அணுகியுள்ளார். ஆனால், அந்த இடத்தை இளவரசன் பெயருக்கு பதிவு செய்ய சார்பதிவாளர் மறுத்துள்ளார்.
இதையடுத்து, இளவரசன் பதிவுத் துறை ஐஜி அலுவலகத்தில் முறையிட்டார். அந்த முறையீடு நிலுவையில் உள்ளது. போலியான ஆவணங்களை தயாரித்து முதியவரை மோசடி செய்யத் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து கமிஷனர் அலுவலகத்திலும், பத்திரப்பதிவு துறையிலும் புகார் செய்துள்ளோம் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் இளவரசன், தனக்கு இடத்தை விற்ற பத்மநாபனை அணுகி கேட்காமல், போலியான ஆவணங்களுடன் வேறு ஒருவரின் நிலத்தை பதிவு செய்ய முயன்றுள்ளார். அவர் இந்த இடத்திற்கு உரிமை கொண்டாட உரிமையில்லை. எனவே, அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அவர் இடத்திற்கு சொந்தக்காரருக்கு 1 லட்சத்தை மார்ச் 28ம் தேதிக்குள் அபராதமாக தரவேண்டும் என்று உத்தரவிட்டார்.