'அம்மா' ஸ்கூட்டர் மானியம் பெற, விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் முடிந்த நிலையில்,சிபாரிசும் துவங்கி விட்டது. ஆளுக்கு, 5,000 ரூபாய் என பேசி, 'கமிஷன்' அள்ளுவதில் அரசியல்வாதிகளை மிஞ்ச ஆளில்லை என, நிரூபிக்க துவங்கி விட்டனர். மானியம் பெற முண்டியடிக்கும் மக்களால், அதிகாரிகளும் கலக்கம் அடைந்து உள்ளனர்.
அறிவிப்பு
தமிழகம் முழுவதும், பணிபுரியும் பெண்களுக்கு, இருசக்கர வாகனம் வாங்க, 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தில், இந்த ஆண்டு, ஒரு லட்சம் பெண்களுக்கு, தலா, 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்க, 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.ஜெ., பிறந்த நாளான, பிப்., 24ல், திட்டம் துவக்கப்பட உள்ளது.
பயனாளிகளை தேர்வு செய்வதற்காக, மாவட்டந்தோறும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
தனியார், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், 2.50 லட்சம் ரூபாய்க்கு குறைவாக, ஆண்டு வருமானம் பெறுவோரிடமிருந்து, விண்ணப்பங்கள் வாங்கப்பட்டன. முதலில், 'பிப்., 5 வரை விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டிருந்தது.
பின், பொதுமக்கள் வேண்டுகோளுக்கிணங்க, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, நேற்று வரை நீட்டிக்கப்பட்டது.நேற்று வரை, தமிழகம் முழுவதும், மூன்று லட்சத்திற்கும் அதிகமான பெண்கள், இருசக்கர மானியம் பெற விண்ணப்பித்து உள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும், எதிர்பார்த்ததை விட, அதிக விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
இவற்றை பரிசீலனை செய்து, பயனாளிகளை தேர்வு செய்ய, சென்னையில், மாநகராட்சி கமிஷனர் தலைமையிலும், மாவட்டங்களில், கலெக்டர்கள் தலைமையிலும், குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
கள ஆய்வு
இக்குழுவில், மாநகராட்சி கமிஷனர்கள், நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர். குழுவினர், கள ஆய்வுக்கு பின், தகுதியான விண்ணப்பங்களை பரிசீலிக்க வேண்டும்.
இதற்கிடையில், இருசக்கர வாகனத்திற்கு மானியம் பெற்றுத் தருவதாகக் கூறி, உள்ளூர் அரசியல் புள்ளிகள், 'கமிஷன்' வசூலிக்க துவங்கி உள்ளனர். மானியத் தொகை, 25 ஆயிரம் பெற, 5,000 ரூபாய் என, வசூல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.
மாவட்டச் செயலர், நகரச் செயலர், ஒன்றியச் செயலர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பேரம் பேச துவங்கி உள்ளனர். பெண்களும், 25 ஆயிரம் ரூபாயில், 5,000 போனால் பரவாயில்லை எனக் கருதி, அரசியல்வாதிகளை நம்பி, பணம் கொடுக்கத் துவங்கி உள்ளனர்.
கட்சியினரிடமிருந்து வரும் சிபாரிசு, முண்டியடிக்கும் மக்கள் ஆகியவற்றால், பயனாளிகளை தேர்வு செய்வது எப்படி எனத் தெரியாமல், அதிகாரிகள் கலக்கமடைந்து உள்ளனர்.- நமது நிருபர்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (22)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply