கட்டணத்தை உயர்த்த கடும் எதிர்ப்பு கிளம்புவதால் சென்னையில் 50 ரூபாய் பஸ் பாஸை நிரந்தரமாக நிறுத்த அதிகாரிகள் முடிவு?

2018-02-11@ 00:49:34

சென்னை:  சென்னையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 50 ரூபாய் பஸ்பாஸை நிரந்தரமாக நிறுத்த போக்குவரத்து அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்(எம்டிசி) சார்பில், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய 3 மாவட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் 3,400க்கும் மேற்பட்ட மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் தங்கி லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை செய்து வருகின்றனர். லட்சக்கணக்கான மாணவர்களும் சென்னையில் தங்கி படிக்கின்றனர். இவர்களுக்கு அரசு பஸ்கள் பெரிதும் உதவியாக இருந்து வந்தது.  இந்த நிலையில் அரசு திடீரென பஸ் கட்டணத்தை 100 சதவீதம் உயர்த்தியது. இதனால் மக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.  அடுத்த அதிரடியாக கடந்த 6ம் தேதி மாநகர பஸ்களில் வழங்கப்பட்ட சீசன் டிக்கெட் கட்டணத்தையும் 35 சதவீதம் வரை உயர்த்தினர். 80 முதல் 160 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து, 1000 ரூபாய் பஸ்பாஸ் கட்டணத்தையும் உயர்த்தப்ேபாவதாக தகவல் வெளியானதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, 1000 ரூபாய் பாஸ்சில் எந்த மாற்றமும் இல்லை என்று போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்தார். இதற்கிடையில், ஒருநாள் மட்டும் விருப்பம் போல் பயணம் செய்யும் 50 ரூபாய் பாஸை, கட்டண உயர்வுக்குப் பின் தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். இந்த பாஸ் வாங்கினால் நாள் முழுவதும் ஏசி பஸ்களை தவிர அனைத்து பஸ்களிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம். வெளியூரில் இருந்து வரும் பொதுமக்கள் சென்னையில் உள்ள சுற்றுலா இடங்களை சுற்றிப்பார்க்க இந்த 50 ரூபாய் பாஸ் பெரிதும் உதவியாக இருந்தது. அதே போல் சென்னையில் தங்கியிருப்பவர்களும் வேலை விஷயமாக பல்ேவறு இடங்களுக்கு செல்வதால் 50 ரூபாய் பாஸ் எடுத்து வந்தனர்.

நாள் ஒன்றுக்கு 2,000 முதல் 3000 பேர் வரை 50 ரூபாய் பாஸ் வாங்கினர். புதிய கட்டண உயர்வுக்கு ஏற்ப 50 ரூபாய் பாஸ் கட்டணத்தை உயர்த்த அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக அந்த பாஸ் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் நிரந்தரமாக 50 ரூபாய் பாஸை நிறுத்தப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய கட்டண உயர்வுடன் ஒப்பிடும்போது ஒருநாள் பாஸ் 50க்கு வழங்கினால் நிர்வாகத்துக்கு கடுமையான இழப்பு ஏற்படும். தற்போது பஸ் டிக்கெட் அதிகபட்சம் 34 வரை உயர்ந்துள்ளது. எனவே ஒரு நபர், ஒரு இடத்துக்கு சென்று திரும்பினால் 70 வரை செலவாகும். எனவே, 50 ரூபாய் பாஸ் வழங்கினால் டிக்கெட் எடுப்போரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிடும். இதனால் நிர்வாகத்துக்கு பல கோடி இழப்பு ஏற்படும். எனவே, 50 ரூபாய் பாஸை நிரந்தரமாக நிறுத்தி வைக்க உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர் என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!