கோவை: தமிழகத்தில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தை விரைவில் வழங்க முதல்வரிடம் கேட்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்வின்குமார் சவ்பே தெரிவித்தார். கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ சேவை பிரிவை மத்திய சுகாதார துறை அமைச்சர் அஷ்வின்குமார் சவ்பே நேற்று தொடங்கி வைத்தார். முன்னதாக மத்திய அமைச்சர் சவுபே செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்துக்கு, 2,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் 50 கோடி மக்கள் பயனடைவர். இதன் மூலம் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் அளவிற்கு மருத்துவசேவை கிடைக்கும். மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, 24 மருத்துவக் கல்லூரிகள் விரைவில் அமைக்கப்படும். மூன்று பாராளுமன்ற தொகுதிக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற அடிப்படையில் துவங்கப்படும்.
கல்வி மற்றும் மருத்துவத்துக்கான செஸ் வரி, மூன்றிலிருந்து, நான்கு சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், 11 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும். ஹெபடைடிஸ் நோயை கட்டுப்படுத்த, வரும் ஆண்டில் ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 20 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க திட்டமிடப்பட்டு, தற்போது, ஆறு எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கான பணிகள் நடந்து வருகின்றன. வருகிற 2020 மார்ச்க்குள் மேலும் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளும், 2022க்குள் 13 எய்ம்ஸ் மருத்துவமனை ஏற்படுத்தப்படும். 2024ல் காஷ்மீரில் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து முதல்வர், சுகாதார துறை அமைச்சர், செயலர் ஆகியோரிடம் ஆலோசிக்கப்பட்டது. அவர்களிடம் மருத்துவமனைக்கான இடத்தை விரைந்து வழங்க வலியுறுத்தியுள்ளேன். இவ்வாறு மத்திய அமைச்சர் கூறினார்.