சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் அருகே பாலையூர் கிராமம் உள்ளது. இங்குள்ள செல்லியம்மன் கோயில் அருகே இருக்கும் காட்டுப்பகுதிக்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று காலை சென்றனர். அப்போது, முட்புதருக்குள் வினோதமான பொருள் கிடந்ததை பார்த்தனர். அருகில் சென்று பார்த்தபோது வெடிகுண்டு என்று தெரிந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் கொடுத்த தகவலின்படி செய்யூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முட்புதருக்குள் கிடந்த வெடிகுண்டை கைப்பற்றி சோதனை நடத்தியபோது, கையெறி வெடிகுண்டு என்பது தெரியவந்தது.
இதையடுத்து காஞ்சிபுரத்தில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கையெறி குண்டு பக்கெட் தண்ணீரில் மூழ்கடித்து செயலிழக்க செய்யப்பட்டது. தொடர்ந்து, அந்த குண்டு அங்குள்ள கல்குவாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. போலீசார் அப்பகுதியில், தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
இதுபற்றி செய்யூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து புதரில் கையெறி வெடிகுண்டை வீசியது யார்? எதற்காக வீசப்பட்டது? புதுச்சேரி ரவுடிகள் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘எங்கள் பகுதியில் கடந்த சில மாதங்களாக நள்ளிரவு நேரங்களில், மர்ம கார் ஒன்று சுற்றி வருகிறது. அதில் இருந்து சிலர் வயல்வெளிகளில் இறங்கி எதையோ புதைப்பதும் எடுத்துச்செல்வதுமாக உள்ளனர். போலீசாரின் ரோந்து பணி குறைவாக உள்ளதால் அச்சத்துடன் வசிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.