செல்லாத நோட்டுகளை எண்ணுவதில் தாமதம் பார்த்தசாரதி கோயிலில் 36 லட்சம் வருவாய் இழப்பு: 2 பெண் அதிகாரிகள் மீது நடவடிக்கை

2018-02-11@ 01:23:38

சென்னை: உண்டியல் பணம் எண்ணுவதில் தாமதம் செய்ததால், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் 36 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டது.  
ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று கடந்த 2016 நவம்பரில் மத்திய அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் வாரத்திற்கு ஒரு முறை உண்டியலை திறந்து பழைய நோட்டுகளை வங்கியில் செலுத்த வேண்டும் என்று அப்போதைய கமிஷனராக இருந்த வீர சண்முகமணி உத்தரவிட்டார். அவர், டிசம்பர் 31ம் தேதிக்குள் கோயில் உண்டியல் பணத்தை வங்கிகளில் செலுத்தி விட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து அனைத்து கோயில்களிலும் உண்டியல் பணம் எண்ணப்பட்டு கோயில் நிர்வாகத்தின் கணக்கில் அந்தந்த வங்கிகளில் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால், 108 வைணவ தலங்களில் ஒன்றான திருவல்லக்கேணி பார்த்தசாரதி கோயிலில் உண்டியலை திறந்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எண்ணி இருக்க வேண்டும். அதாவது, கோயில் நிர்வாக அதிகாரி மற்றும் தக்கார் ஆகிய இரண்டு பெண் அதிகாரிகளும் உண்டியல் பணத்தை எண்ணுவதற்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக, ரூ.500, ரூ.1000 மதிப்பிலான பழைய நோட்டுகள் உடனடியாக எண்ணாமல் விட்டதன் விளைவாக 36 லட்சம் வரை வங்கிகளில் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கியை அணுகியும், அங்கு பணத்தை பெற்றுக்கொள்ளவும் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணத்தை ஒப்படைக்க தவறியதால் அறநிலையத்துறைக்கு கிடைக்க வேண்டிய 36 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பெண் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு அறநிலையத்துறை கமிஷனர் தரப்பில் நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இரண்டு பேரிடம் அறநிலையத்துறை ஆணையர் தனி, தனியாக விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் இரண்டு பெண் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு நிரூபனம் ஆனதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அந்த இரண்டு பெண் அதிகாரிகள் மீது 17 ஏ பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்து அறநிலையத்துறை ஆணையர் ஜெயா உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது. இந்த சம்பவம் அறநிலையத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!