கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. மாணவர்களிடமும் லட்சக்கணக்கில் வசூல் அம்பலம்: 200 பேரிடம் போலீஸ் விசாரணை

2018-02-11@ 01:07:41

கோவை: பாரதியார் பல்கலையில் பி.எச்டி. மாணவர்களிடம் துணைவேந்தர் கணபதி, தொலைதூர இயக்குனர் மதிவாணன் ஆகியோர் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், பதிவாளர் உள்பட 200  பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். கோவை  பாரதியார் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் சுரேஷ் என்பவரிடம் ரூ.30 லட்சம்  லஞ்சம் வாங்கிய வழக்கில் துணைவேந்தர் கணபதி (67), பேராசிரியர் தர்மராஜ்  (56) ஆகியோர் கடந்த 3ம் தேதி கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் கோவை  மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கின் 3வது குற்றவாளியான தொலைதூர கல்வி மைய இயக்குநர் மதிவாணன்  தப்பிவிட்டார். அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
துணைவேந்தர் கணபதியுடன் சேர்ந்து மதிவாணன், வினாத்தாள், பாடப்புத்தகம் வாங்கியது, தொலைதூர கல்வி மையங்கள் துவக்க அனுமதி  வழங்கியது என பல்வேறு வகைகளில் இவர்களின் மோசடி பட்டியல் நீள்கிறது. இதுதொடர்பாக பல்கலைக்கழகத்தில் உள்ள மதிவாணன் அறையில் போலீசார் சோதனை நடத்தி  பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். துணைவேந்தருக்கு இணையாக மதிவாணனும்  பல கோடி ரூபாய் சுருட்டியிருப்பதாக தெரிகிறது.

இதன்காரணமாக, பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் பி.எச்டி. படித்து முடித்தவர்கள்  மற்றும் தற்போது படித்து வருகிறவர்களிடமும் போலீசார் விசாரணை  நடத்த முடிவு  செய்துள்ளனர். இவர்களிடம்  கணபதி,  லட்சக்கணக்கில்  பணம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக,  கல்வியியல்  துறையில் பி.எச்டி. பட்டம் முடிக்க ஒருவருக்கு 5 லட்சம்  வரை பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்ற குற்றச்சாட்டுகளால், பதிவாளர், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உட்பட 200 பேரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
குறிப்பாக பணி நியமனம் பெற்ற 82 பேரிடம் தனித்தனியாக விசாரணை நடந்துள்ளது.  தகுதி இருந்தும் பணி வாய்ப்பு தரவில்லை என புகார் கூறிய சிலரிடம் போலீசார் விசாரித்தனர். லஞ்சம் கேட்டு தராததால் பணி நியமனம் வழங்கவில்லையா என அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!