தேனி: தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலைத்திருவிழா மற்றும் கலையருவி திருவிழா தேனியில் நேற்று நடந்தது. கலெக்டர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். இவ்விழாவிற்காக பெரியகுளம் கல்வி மாவட்டத்தில் இருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த சுமார் 1,500 மாணவ, மாணவிகள் அழைத்து வரப்பட்டிருந்தனர். விழாவில் பேச்சு, கட்டுரை, ஓவியம், நடனம் உள்ளிட்ட போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பரிசு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார். மாணவர்கள் சந்தோஷத்துடன் சான்றிதழ் மற்றும் கேடயங்களை பெற்று மேடையை விட்டு இறங்கினர்.
ஆனால், அங்கு தயாராக நின்றவர்கள், “உங்களுக்கு பள்ளியில் பரிசு தருவார்கள்” எனக்கூறி அவற்றை பறித்துக் கொண்டனர். இதனால் மாணவ, மாணவிகளுக்கு பெருத்த ஏமாற்றமும், அதிர்ச்சியும் ஏற்பட்டது. பலர் கண் கலங்கினர். இதுகுறித்து விசாரித்தபோது, விழாவில் வழங்க 10 பேருக்கு மட்டுமே சான்றிதழ், கேடயம் தயார் செய்யப்பட்டதாகவும், அதனால், கொடுத்த பரிசையே அனைவருக்கும் மீண்டும் கொடுக்கும் நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ‘கண்டேன் காதல்’’ படத்தில் நடிகர் சந்தானம், ஏழைகளுக்கு துணிகளை கொடுப்பது போல கொடுத்து மீண்டும் பறித்துக்கொள்ளும் காமெடி காட்சி வைத்திருப்பார்கள். அதேபோல, மாணவர்களுக்கு கொடுத்த பரிசுகளை பறித்து கொண்ட நிகழ்வு மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.