நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் வரை போராட்டம்: கி.வீரமணி பேட்டி

2018-02-11@ 00:48:02

சென்னை:  நீட் தேர்வை நிரந்தரமாக நீக்க கோரி திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி மாணவர்கள் கூட்டமைப்பு சந்திப்பு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. நீட் தேர்விற்கு எதிராக மாணவர்கள் அமைப்பு சார்பில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தை அடுத்து கி.வீரமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவ கனவை பறிக்கும் வகையில் நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசின் முயற்சியை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும், கடந்த ஆண்டு தமிழக சட்ட பேரவையின் போது நீட் தேர்விற்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து நிறைவேற்றப்பட்ட 2 தீர்மானம் என்ன ஆனது என்பது தெரியவில்லை. இந்த இரண்டு சட்ட திருத்த மசோதாக்களையும் இன்னும் குடியரசு தலைவரின் பார்வைக்கே அனுப்பாமல் வைத்திருப்பது நாடாளுமன்ற நடைமுறைக்கும், அரசியல் சட்டத்துக்கும் எதிரானது. எனவே, அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் பெற வலியுறுத்துகிறோம்.

எனவே, நீட் தேர்விற்கு தமிழக அரசு விலக்கு பெற வேண்டும். இதை வலியுறுத்தி நாங்களும், மாணவர்களும் ஒன்றிணைந்து அனைத்து கல்லூரிகளிலும் வாயிற் கூட்டங்களையும், பரப்புரை கூட்டங்களையும், துண்டறிக்கை விநியோகம், தொடர் முழக்க போராட்டம் ஆகியவற்றை நடத்த இருக்கிறோம். இதேபோல் மார்ச் மாதம் டெல்லியில் தேசிய கருத்தரங்கையும், போராட்டத்தையும் நடத்துகிறோம். மேலும், நீட் தேர்விற்கு விலக்கு பெற மாணவர்களின் பிரதிநிதிகள் முதல்வரையும் சந்திக்க இருக்கிறார்கள். முதலாவதாக, சென்னை மருத்துவ கல்லூரி முன்பு வாயிற் கூட்டம் ஆரம்பிக்க இருக்கிறது. சமூக நீதி பாதுகாப்புக்கான அனைத்து அமைப்பு பேரவை என்ற பெயரில் பிரச்னைகளை எடுத்து செல்ல இருக்கிறோம். நீதிமன்றத்தையும் நாட இருக்கிறோம். நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் வரை தமிழகத்தில் அறப்போராட்டம் தொடரும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!