கோப்பல்: கர்நாடகாவில் ஊழலில் பாஜக உலக சாதனை படைத்துள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக சாடியுள்ளார். ஆனால் ஆளும் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி ஊழல் அற்ற ஆட்சியாக திகழ்ந்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் மீண்டும் ஆட்சியில் அமர காங்கிரஸ் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. தென் மாவட்டங்களில் முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். கொப்பல் மாவட்டத்தில் மக்களிடம் ஆசிர்வாதம்' என்று தேர்தல் பிரசாரத்துக்கு பெயரிட்டு ராகுல் காந்தி பயணம் மேற்கொண்டார்.
அப்போது மக்கள் மத்தியில் ராகுல் பேசும் போது கர்நாடக மாநிலத்தில் ஆளும் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் இதுவரை எந்த ஊழல் குற்றச்சாட்டும் கிடையாது. ஆனால், இதற்கு முன் மாநிலத்தில் ஆண்ட 3 முதல்வர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு இருந்தது. ஊழலில் பாஜக உலகசாதனை படைத்துவிட்டது.
மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருந்தபோது, சுரங்க ஊழலில் இருந்து ஒவ்வொரு ஊழலாக வெளியே வந்து கொண்டு இருந்தது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக கர்நாடகாவில் நடைபெறும் காங்கிரஸ் ஆட்சியில் எந்த ஊழலும் இல்லை. ஊழல் குறித்துப் பேசும் பிரதமர் மோடி, கர்நாடக மாநிலத்தில் தங்களின் சொந்தக் கட்சியினர் ஆட்சி செய்தபோது, செய்த ஊழல் சாதனையையும் பார்க்க வேண்டும். கடந்த பாஜக ஆட்சியில் 3 முதல்வர்களும், 4 அமைச்சர்களும் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக சிறைக்குச் சென்றனர் என ராகுல் குற்றம்சாட்டியுள்ளார். மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஆதரவு அளித்து, ஆட்சியில் அமரவைக்க வேண்டும் என்று ராகுல்காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.