சென்னை: நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள லட்சக்கணக்கான தீர்த்து வைக்கக்கூடிய வழக்குகள் ஒவ்வொரு மாதமும் லோக் அதாலத் மூலம் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. நாட்டிலேயே அதிக வழக்குகளை லோக் அதாலத் மூலம் தீர்த்து வைப்பதில், தமிழகம் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. இந்த வரிசையில் இந்த ஆண்டுக்கான தேசிய லோக் அதாலத், நேற்று தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நடைபெற்றது. இதில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள், வழக்கு தொடர்வதற்கு முந்தைய கட்டத்தில் உள்ள வழக்குகள் என மொத்தம் 1.5 லட்சம் வழக்குகள் நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரிப்பதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் 10 பெஞ்சுகளும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 7 பெஞ்சுகளும் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு பெஞ்சிலும் உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இது தவிர மாவட்ட நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்கள் என 421 பெஞ்சுகள் வழக்குகளை விசாரித்தன. நேற்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வழக்குகளில் 78,108 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் வழக்கு தொடர்ந்தவர்களுக்கு 277 கோடியே, 32 லட்சத்து, 43 ஆயிரத்து, 291 பைசல் செய்யப்பட்டது.