சீட்டு விளையாட்டை வேடிக்கை பார்த்தவருக்கு நேர்ந்த சோகம் எஸ்.ஐ. துரத்தியதால் கடலில் குதித்த மீனவர் சேற்றில் சிக்கி பரிதாப மரணம்

2018-02-11@ 01:10:08

சென்னை: சீட்டு விளையாடிக்கொண்டிருந்த மீனவர்களை போலீசார் துரத்தியபோது, தப்பி ஓடிய மீனவர் ஒருவர் கடலில் குதித்தபோது சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதையொட்டி மீனவர்கள், பொதுமக்கள் திடீர்  மறியல் செய்ததால் காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ெசன்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் தினமும் அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரை பரபரப்பாக காணப்படும். இங்கு மீன் மார்க்கெட், ஐஸ் கம்பெனி, படகுகள் பழுது பார்ப்புக்கான உபகரண கடைகள், சிறிய சிறிய ஓட்டல்கள் என பலதரப்பட்ட கடைகள் உள்ளன. மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து விட்டு அதிகாலையில் கரைக்கு திரும்பியதும் மீன்கள் ஏலம் விறுவிறுப்பாக நடைபெறும். இங்கிருந்து வெளிநாடுகளுக்கு மீன்கள் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. இந்நிலையில், காசிமேடு துறைமுகத்தில் நேற்று முன்தினம் இரவு பொழுது போக்குக்காக சீட்டு விளையாடியவர்களை போலீசார் துரத்தியபோது மீனவர் ஒருவர் கடல் பகுதி சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு: காசிமேடு சி.ஜி. காலனிைய சேர்ந்த திமுக பிரமுகர் தமிழரசன் (33). இவர், சொந்தமாக படகு வைத்து மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவருக்கு தீபிகா (28) என்ற மனைவியும், அனிஷ் (8), லக்‌ஷன் (6) என இரண்டு மகன்களும் உள்ளனர். காசிமேட்டை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மீனவர்கள், கடலுக்கு மீன்பிடிக்க சென்றால் குறைந்தது 2 நாட்கள் முதல் மாதக்கணக்கில் கடலிலேயே தங்கி மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்புவார்கள். அந்த வகையில், மீன்பிடித்து விட்டு வரும் மீனவர்கள் சிலர், இரவு நேரங்களில் பொழுது போக்குக்காக துறைமுக வார்ப்பு பகுதியில் சீட்டு விளையாடுவார்கள். இந்நிைலயில், நேற்று முன்தினம் இரவு அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் 6 பேர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். இதை தமிழரசன் உள்ளிட்ட 4 பேர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். சீட்டாட்டம் நடப்பது பற்றி அறிந்ததும் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் எஸ்ஐ கண்ணன் தலைமையில் 10 போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த மீனவர்கள் அனைவரும் தப்பி ஓடினர்.

போலீசாரை கண்டு பயந்து ஓடிய தமிழரசன் கடல் அரிப்புக்காக போடப்பட்டிருந்த பெரிய பெரிய கற்கள் அருகே குதித்துள்ளார். அதன் பின்னர் தமிழரசனை  காணவில்லை. இதனிடையே, அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர், தேடியபோது சீட்டு விளையாட்டை வேடிக்கை பார்க்க சென்றபோது, போலீசார் துரத்தியது தெரியவந்தது. இதையடுத்து, தமிழரசனை தேடி துறைமுக வார்ப்பு பகுதிக்கு சென்றனர். அப்பகுதி மீனவர்களும், காசிமேடு தீயணைப்பு படை வீரர்களும் தேடியபோதும் தமிழரசனை கண்டுபிடிக்க முடியாமல் திரும்பினர். இந்நிலையில் நேற்று காலை மீண்டும் தேடியபோது தமிழரசன் சேற்றில் சிக்கி இறந்திருப்பது தெரியவந்தது. இதனால் பதற்றம் அடைந்த 100க்கும் மேற்பட்ட மீனவர்கள்,  திமுக பகுதி செயலாளர் மருதுகணேஷ் மற்றும் திமுகவினர், பொதுமக்கள்  ஒன்று கூடி காசிமேடு துறைமுக பகுதி அருகே திடீர் மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த காசிமேடு துறைமுக பகுதிக்கு  ஏராளமான போலீசாரும் வந்தனர். தமிழரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்தனர். ஆனால் அங்கு திரண்டிருந்த மீனவர்கள், பொதுமக்கள் தமிழரசனின் உடலை கொண்டு செல்ல விடாமல் தடுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த கூடுதல் ஆணையர் ஜெயராம், வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சசாங்சாய் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவத்துக்கு காரணமான எஸ்ஐ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இறந்த தமிழரசனின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும், அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தினர்.  அதற்கு, ‘உங்களது கோரிக்கைள் தொடர்பாக உயரதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கிறோம்’ என்று போலீஸ் அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
இதன்பிறகு தமிழரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ‘நாங்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றால் ஒரு வாரம், அல்லது ஒரு மாதத்துக்கு பிறகே கரைக்கு திரும்புவோம். பொழுது போக்குக்காக சீட்டு விளையாடுவோம். போலீசார் துரத்தியதில் தமிழரசன் இறந்து விட்டார். தற்போது, அவரது குடும்பம் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறது. நாங்கள் மீன்பிடி தொழிலை நம்பிதான் வாழ்கிறோம். தமிழரசன் இறந்து விட்டதால் இழந்து வாடும் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்கி, இழப்பீடு வழங்க வேண்டும்’ என்றனர்.

திருமண நாளிலேயே  இறந்த சோகம்
இறந்த தமிழரசனுக்கு நேற்று 9ம் ஆண்டு திருமணநாள். இதையொட்டி வீட்டில் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார். கேக் வெட்டி கொண்டாடி குடும்பத்தினர், நண்பர்களுடன் ஜாலியாக இருக்க நினைத்திருந்தார்.  ஆனால் திருமண நாள் அன்று அவர் இறந்துவிட்டதால் குடும்பத்தினர், உறவினர்கள் மிகுந்த சோகத்தில் மூழ்கினர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!