சென்னை-காட்பாடி வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்கள்?: தெற்கு ரயில்வே பொதுமேலாளர் பேட்டி

2018-02-11@ 01:06:28

வேலூர்:  சென்னையில் இருந்து நேற்று காலை சிறப்பு தனி ரயிலில் தெற்கு பொதுமேலாளர் குலேஷ் ரேஷ்தா, அதிகாரிகள் குழுவுடன் காட்பாடி ரயில் நிலையத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர், சுகாதாரம், மருத்துவம், சிக்னல் பிரிவு, தொலைத் தொடர்பு ஆகியவற்றுக்கு தலா 10 ஆயிரம் ரொக்கப்பரிசும் ஒட்டு மொத்த ரயில் நிலையம் சிறப்பாக செயல்படுவதை பாராட்டி காட்பாடி ரயில் நிலைய மேலாளர் மதிவாணனிடம் 20 ஆயிரம் ரொக்கப்பரிசும் பாராட்டு சான்றிதழும் வழங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து நாள்தோறும் சுமார் 18,000 பேர் பயணம் மேற்கொள்கின்றனர். வணிக ரீதியாக முதல் தரவரிசை பட்டியலில் இடம்பிடித்துள்ள இந்த ரயில் நிலையம் கடந்த 2016-17ம் ஆண்டில் 1542.18 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

பஸ் கட்டண உயர்வைத் தொடர்ந்து சென்னை சென்ட்ரலில் இருந்து தாம்பரம், அரக்கோணம், திருத்தணி, கும்மிடிபூண்டி ஆகிய வழித்தடங்களில் கூடுதலாக 27 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டதால் கணிசமாக வருவாய் உயர்ந்துள்ளது. பயணிகளின் தேவைக்கு ஏற்ப புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும். மேலும் சென்னையில் இருந்து புறநகர் மின்சார ரயில் சேவையை காட்பாடி வரை நீட்டிப்பது தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். அதைத்தொடர்ந்து வாலாஜா ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!