தலைமறைவு வாழ்க்கை நடத்த ரவுடி பினுவுக்கு கரூரில் வீடு எடுத்து கொடுத்தவர் கைது: போலீஸ் பிடியில் கூட்டாளிகள்

2018-02-11@ 00:47:34

சென்னை: ரவுடி பினு போலீசாரிடம் இருந்து தப்பித்து தலைமறைவு வாழ்க்கை நடத்த கரூரில் வீடு எடுத்து கொடுத்த கூட்டாளியை போலீசார் கைது செய்தனர். கொலை வழக்கு ஒன்றில் தலைமறைவாக இருந்த ரவுடி பல்லு மதன் என்பவனை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் கடந்த 7ம் தேதி மதியம் பள்ளிக்கரணையில் கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில், வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் உள்ள மலையம்பாக்கத்தில் உள்ள ஒரு லாரி ஷெட்டில், பிரபல ரவுடி சூளைமேடு பகுதியை சேர்ந்த பின்னி (எ) பினு (45) பிறந்த நாள் விழா நடைெபறுவதாகவும், இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ரவுடிகள் பலர் பங்கேற்க வருவதும் தெரிந்தது. இதையடுத்து கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் கமிஷனர் சாரங்கன், இணை கமிஷனர் சந்தோஷ்குமார், துணை கமிஷனர் சர்வேஷ் ராஜ் ஆகியோரின் ஆலோசனைப்படி 50க்கும் மேற்பட்ட போலீசார் இரவு 10 மணிக்கு சம்பவ இடத்தை சுற்றி வளைத்து அதிரடியாக உள்ளே புகுந்தனர். அப்போது, 150க்கும் மேற்பட்ட ரவுடிகள் புடைசூழ தனது பிறந்த நாள் கேக்கை அரிவாளால் வெட்டி கொண்டாடி கொண்டிருந்த ரவுடி பின்னி (எ) பினு மற்றும் அவரது கூட்டாளிகள், போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடினர்.

அவர்களில் 53 பேரை சுற்றிவளைத்து கைது ெசய்தனர். தப்பி ஓடி அருகில் உள்ள கிராமத்தில் பதுங்கிய 23 பேர் என மொத்தம் 76 ேபரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 35க்கும் மேற்பட்ட அரிவாள்கள், பட்டாகத்திகள், 88க்கும் மேற்பட்ட செல்போன்கள், 50 பைக்குகள் மற்றும் ஒரு ஆட்டோ, 7 சொகுசு கார்கள், மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ரவுடி பினு தனது கூட்டாளிகளுடன் தப்பி ஓடிவிட்டான். கைதானவர்களில் ஒருவர் மட்டும் நிபந்தனை ஜாமீனில் விடுக்கப்பட்டார். மீதமுள்ள 75 பேரில், மூன்று பேர் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என்பதும், இவர்கள் இலவச மது மற்றும் பிரியாணிக்காக பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டதும் தெரிந்தது. போலீசார், அவர்களை எச்சரித்து அனுப்பினர். மீதமுள்ள 72 பேரை சைதாப்பேட்டை, எழும்பூர் உள்ளிட்ட நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியான பினுவை பிடிக்க அம்பத்தூர் துணை கமிஷனர் சர்வேஷ் ராஜ் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பினு மற்றும் கூட்டாளிகள் கனகு, விக்கி ஆகியோரின் செல்போன் எண்களை வைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

பினுவின் சொந்த ஊர் கேரள மாநிலம் திருச்சூர் என்பதால் அங்கு தப்பி சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் கேரளாவுக்கு 2 தனிப்படைகள் விரைந்துள்ளனர். மீதமுள்ள 2 தனிப்படைகள் சென்னை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் தேடி வருகின்றனர். மேலும், பினுவுடைய தொடர்புகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பட்டுக்கோடையில் பதுங்கி இருந்த பினுவின் நெருங்கிய கூட்டாளியான சென்னையை சேர்ந்த முகுந்த் (28) என்பவனை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து, சென்னை அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். அவன் கொடுத்த தகவலின் பேரில், பினுவுக்கு வலதுகரமாகவும், அவன் தங்குவதற்கு கரூர் வேலாயுதபுரம் பகுதியில் வாடகை வீடு எடுத்து கொடுத்தவருமான, அதே பகுதியை சேர்ந்த மாதவன் (36) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். இவரையும் சென்னை அழைத்து வந்து விசாரிக்க உள்ளனர். மாதவன் கைது குறித்து போலீசார் கூறியதாவது: கடந்த 2013ம் ஆண்டு சென்னை சூளைமேடு பகுதியில் மாதவன் பியூட்டி பார்லர் நடத்தி வந்துள்ளார். இவரது கடைக்கு ரவுடி பினு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அப்போது, அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது.

ஒருநாள் மாதவன் கடைக்கு வந்த பினு, ‘கொலை வழக்கு ஒன்றில் போலீசார் தன்னை தேடுகின்றனர். எனவே, வெளியூரில் தங்குவதற்கு பாதுகாப்பான இடம் ஒன்று தேவை,’ என மாதவனிடம் கேட்டுள்ளான். இதையடுத்து, கரூரில் தனது வீட்டின் அருகில், பினு தங்குவதற்கு ரூ.1,200 மாத வாடகையில் மாதவன் வீடு எடுத்து ெகாடுத்துள்ளார். பினு அங்கு தங்கியபடியே, சென்னையில் ஆள் கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்டவைகளை செய்து வந்துள்ளான். அங்கு 5 வருடமாக தங்கிய பினு, சமீபத்தில் சென்னை திரும்பி உள்ளான். இதையடுத்து, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட செயல்களில் பெரிய அளவில் ஈடுபட முடிவு செய்துள்ளான். மேலும், முதல் சம்பவமே தனது எதிரிகளும், சென்னையில் உள்ள பிற ரவுடிகளும் பயந்து நடுங்கும் வகையில் இருக்க வேண்டும் என்று கருதி உள்ளான். சென்னையில் ஒரு சிம்ம சொப்பனமாக தான் இருக்க வேண்டும் என்பதற்காகவும், தனது பலத்தை காண்பிக்கும் வகையிலும் இந்த பிறந்தநாள் விழா பார்ட்டியை பினு ஏற்பாடு செய்துள்ளான். தற்போது கைதாகியுள்ள மாதவனிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. தப்பிேயாடிய பினு மற்றும் கூட்டாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். ரவுடி பினு கூட்டாளிகள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், பல்வேறு தகவல்கள் வெளியாகி வருவதும் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டீக்கடை நடத்தியவர்
கேரளாவில் இருந்து பிழைப்புக்காக சென்னை வந்த பினு, கடந்த 1990ம் ஆண்டு சூளைமேட்டில் சிறிய அளவில் டீக்கடை நடத்தி வந்துள்ளான். அப்போது, உள்ளூர் ரவுடிகளுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களுடன் சேர்ந்து அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளான். இதில், அதிகளவு வருவாய் கிடைத்ததால், டீக்கடை தொழிலை விட்டுவிட்டு முழுநேர ரவுடியாக வலம் வந்துள்ளான்.

சிறையில் நட்பு
பினு பிறந்த நாள் பார்ட்டி நடத்திய லாரி ஷெட், திண்டுக்கல்லை  சேர்ந்த வேலு (40) என்பவருக்கு சொந்தமானது. இவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. வழக்கு ஒன்றில் கைதாகி வேலு  சிறையில் அடைக்கப்பட்டபோது, பினுவுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு, வேலு பல்வேறு வகையில் பினுவுக்கு உதவியது தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள  இவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!