புதுடெல்லி: ‘‘கச்சா எண்ணெய் விலை உயர்வால் நாட்டின் நிதி நிலையில் சரிவு ஏற்படும் என இப்போதைக்கு கவலைப்பட தேவையில்லை’’ என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார். மத்திய பட்ஜெட்டுக்குப் பிறகு ரிசர்வ் வங்கியின் போர்டு கூட்டம் நடப்பது வழக்கம். அதன்படி, டெல்லியில் நேற்று இக்குழுவின் கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கலந்து கொண்டார். பின்னர், அவர் அளித்த பேட்டி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், நாட்டின் நிதி நிலையில் ஏற்படும் பின்விளைவுகள் பற்றி உடனடியாக கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
கச்சா எண்ணெய் விலை உயர்வால் நாட்டில் கடந்த 3 நாட்களாக எதிர்மறையான சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இருப்பினும், அது பற்றி அனுமானத்தின் அடிப்படையிலான எந்த மதிப்பீடும் செய்யக் கூடாது. நிதிப் பற்றாக்குறை இலக்கில் சரிவு ஏற்படுவது பற்றியும் இப்போதைக்கு கவலைப்பட தேவையில்லை. ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தலைமையில் நடந்த நிதிக் கொள்கை குழு கூட்டத்தில், வங்கி வட்டி விகிதத்தை மாற்றுவது இல்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது சமநிலையை ஏற்படுத்தும் ஒரு முடிவாகும். நிதி நிலையை பொருத்த வரையில், அடுத்த நிதியாண்டில் சீராகி விடும். இப்போதைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இவ்வாறு ஜெட்லி கூறினார்.