புதுடெல்லி: டெல்லியில் விமானப்படை தலைமை அலுவலகத்தில் குரூப் கேப்டனாக பணியாற்றிவர் அருண் மர்வா (51). விமானப்படை தலைமையகத்துக்குள் அதிக திறன் வாய்ந்த ஸ்மார்ட் போன்களை கொண்டு செல்ல தடை உள்ளது. அதையும் மீறி இவர் செல்போன் கொண்டு சென்றார். இதை விமானப்படையின் உளவுப்பிரிவு கண்டுபிடித்து அவரது ஆன்லைன் செயல்பாடுகளை கண்காணிக்கத் தொடங்கியது. அருண் மர்வாவுடன், பேஸ்புக் மூலம் ஒரு பெண் கடந்த டிசம்பர் மாதம் நட்பு வட்டாரத்தில் இணைந்துள்ளார். கிரண் ரந்த்வா மற்றும் மகிமா படேல் என்ற இரண்டு பேஸ்புக் கணக்குகள் மூலம் இவர் தொடர்பு கொண்டுள்ளார்.
பேஸ்புக் தோழிக்கு இவரே சிம் கார்டும் வாங்கி கொடுத்து பேசியுள்ளார். வாட்ஸ் அப்பில் இருவரும் செக்ஸ் தகவல்களை பரிமாறியுள்ளனர். அப்படியே அந்தப் பெண், விமானப்படை பற்றிய தகவல்களையும் கேட்டுள்ளார். போர் விமான பயிற்சிகள் பற்றிய விவரம் மற்றும் படங்களை இவர் அந்தப் பெண்ணுக்கு அனுப்பியுள்ளார். அந்தப் பெண் பாகிஸ்தான் உளவுப்பிரிவான ஐஎஸ்ஐ நியமித்த பெண் எனத் தெரிய வருகிறது.
இதையடுத்து, அருண் மர்வாவை விமானப்படையின் உளவுப்பிரிவு கடந்த மாதம் 31ம் தேதி பிடித்து கடந்த 10 நாட்களாக விசாரணை நடத்தியது. வாட்ஸ் அப் மூலம் அவர் ராணுவ ரகசியத்தை அனுப்பியது உறுதி செய்யப்பட்டதால், அவர் டெல்லி சிறப்பு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அருண் மீது ராணுவ ரகசிய சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். மேல் விசாரணைக்காக அவரை 5 நாள் போலீஸ் காவலில் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. அருணை வசப்படுத்திய பாகிஸ்தான் உளவாளிகளை அடையாளம் காணும் பணியில் போலீசார் இறங்கியுள்ளனர்.