ஜோகன்னஸ்பர்க்: இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் 4வது ஒருநாள் போட்டி, ஜோகன்னஸ்பர்க் நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை 4.30க்கு தொடங்குகிறது. மொத்தம் 6 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியுடன் 3-0 என முன்னிலை வகிக்கிறது. தென் ஆப்ரிக்காவில் விளையாடிய இருதரப்பு ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணி முதல் முறையாக 3 வெற்றிகளை வசப்படுத்தியுள்ளது. சமன் செய்வதற்கான வாய்ப்பை உறுதி செய்துவிட்ட கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, தொடர்ச்சியாக 4வது வெற்றியுடன் தொடரையும் கைப்பற்றி சாதனை படைக்கும் முனைப்புடன் களமிறங்குகிறது.
பேட்டிங்கில் ‘ரன் மெஷின்’ கோஹ்லி, தவான், ரகானே, டோனி ஆகியோர் நல்ல பார்மில் உள்ள நிலையில், குல்தீப் - சாஹல் சுழல் கூட்டணி இந்தியாவுன் முக்கிய துருப்புச்சீட்டாக விளங்குகிறது. நடப்பு தொடரில் இவர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து தடுமாறி வருகின்றனர். கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் 3 போட்டிகளில் விளையாடாத அதிரடி வீரர் டி வில்லியர்சின் வருகை மட்டுமே அந்த அணிக்கு சற்று நம்பிக்கையை கொடுத்துள்ளது. மார்னி மார்கெல், பர்கான் பெகார்டியனும் வலு சேர்க்கலாம்.
தொடரை வெல்ல இந்தியாவும், முதல் வெற்றிக்காக தென் ஆப்ரிக்காவும் வரிந்துகட்டுவதால், இன்றைய ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
* இந்திய அணி கடைசியாக விளையாடிய 5 ஒருநாள் போட்டிகளில் வென்றுள்ளது. தென் ஆப்ரிக்கா 2 வெற்றி, 3 தோல்வி கண்டுள்ளது.
* டெஸ்ட் போட்டிக்கான வாண்டரர்ஸ் ஆடுகளம் மோசமாக இருந்ததாக ஐசிசி சான்றிதழ் அளித்துள்ளதால், இன்றைய போட்டிக்கான பிட்ச் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* தென் ஆப்ரிக்க வீரர்கள் இன்று ரோஜா வண்ண சீருடை அணிந்து களமிறங்க உள்ளனர். இந்த வண்ண சீருடையுடன் விளையாடிய 5 ஒருநாள் போட்டிகளிலுமே அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. இதில் இந்தியாவுக்கு எதிராக 2013 டிசம்பரில் நடந்த போட்டியில் 141 ரன் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியும் அடங்கும்.