சென்னை: பாரம்பரியமிக்க சென்னை பல்கலைக்கழகத்திற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடம் சான்றிதழ் பாதுகாப்பு கட்டணம் 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. நிதி நெருக்கடி தொடர்ந்தால் பேராசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலைக்கு பல்கலைக்கழகம் தள்ளப்படும் சூழல் உருவாகியுள்ளது. பாரம்பரியமிக்க சென்னை பல்கலைக்கழகம் 1857ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது. 5 குடியரசுத் தலைவர்களை உருவாக்கிய ஒரே பல்கலைக்கழகம் என்ற பெருமையை சென்னை பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. வரலாற்றில் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு தற்போது சென்னை பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதற்கு காரணம் தொலைதூர கல்வி மையங்கள் மூடப்பட்டதே ஆகும்.
இதன் காரணமாக சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு கல்லூரிகள் 15 மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் 30, சுயநிதி கல்லூரிகள் 115 என 150க்கும் மேற்பட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பயில்கின்ற ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு சான்றிதழ் பாதுகாப்பு கட்டணமாக அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.1000, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.2000 நிர்ணயிக்க பல்கலைக்கழகம் முடிவு செய்திருக்கிறது. ஏற்கனவே ரூ.250 ஆக இருந்த கட்டணம் தற்போது பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கடுமையான நிதி நெருக்கடியில் சென்னை பல்கலைக்கழகம் இப்போது சிக்கியிருக்கிறது. கடந்த காலங்களில் அண்ணாமலை பல்கலைக்கழகம் இதேபோன்ற நிதி நெருக்கடியில் சிக்கியதை தொடர்ந்து தான் அரசே அண்ணாமலை பல்கலைக்கழகத்தை ஏற்று நடத்தி வருகிறது. அப்படி ஒரு சூழல் சென்னை பல்கலைக்கழகத்திற்கு வராமல் தடுக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.