சியோல்: வடகொரியாவின் தொடர் அணு ஆயுத சோதனைகள் காரணமாக வடகொரியா-தென்ெகாரியா இடையே பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வடகொரிய விருப்பம் தெரிவித்தது. இதனை தென்கொரியாவும் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து, வடகொரியா தனது வீரர்களை அனுப்பி வைத்துள்ளது. இந்த போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக வடகொரிய அதிபரின் சகோதரி கிம் யோ ஜங் தலைமையிலான பிரதிநிதிகள் குழு நேற்று தென்கொரியா சென்றது. அவருடன் 90 வயதாகும் வடகொரியாவின் நாடாளுமன்ற தலைவரும், விழா குழு தலைவருமான கிம் யாங் நாம் சென்றுள்ளார்.
இவர்களை விமான நிலையத்தில் தென்கொரிய அமைச்சர் சோ மையாங்-கியான் வரவேற்றார். தொடர்ந்து, ஒலிம்பிக் தொடக்க விழாவில் பங்கேற்ற அவர்களை தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் வரவேற்றார். கிம் யாங் நாமை தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் கைகுலுக்கி வரவேற்றார். அவரது மனைவியும் வடகொரிய விருந்தினர்களை சிரித்த முகத்தோடு வரவேற்றார். கடந்த 1953ம் ஆண்டு நடந்த கொரிய போருக்கு பின்னர் தென்கொரியா சென்றுள்ள வடகொரிய அதிபரின் முதல் குடும்ப உறுப்பினர் கிம் யோ ஜங் என்பது குறிப்பிடத்தக்கது.