விமானப்படைக்கு வலு சேர்க்க ரபேல் போர் விமானங்களை வாங்க முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், கடந்த 2014ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தது. இதன் பின்னர் இந்த ஒப்பந்தத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. பிரான்சிடமிருந்து 36 போர் விமானங்களை மட்டுமே வாங்குவது என முடிவு செய்யப்பட்டது. சிலவற்றை தயார் நிலையிலும், சிலவற்றை இந்திய நிறுவனத்துடன் இணைந்து கூட்டு தயாரிப்பில் செய்து தரவும் முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில், சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற குஜராத் தேர்தல் பிரசாரத்தின் போதே ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அப்போது பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். ஆனால், ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் நாட்டுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் தொடர்பான விவரத்தை பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிட முடியாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக கூறினார்.
போர் விமானம் வாங்க எவ்வளவு பணம் செலவிடப்படுகிறது என்ற விவரத்தை தெரிவிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் முதல் முறையாக மறுத்துள்ளார் என்று ராகுல் அடுத்த குற்றச்சாட்டை முன்வைத்தார். பிரதமர் மோடி பிரான்ஸ் சென்று தனிப்பட்ட முறையில் இந்த ஒப்பந்தத்தை செய்துள்ளார் என்றும் அவர் கூறினார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரூ.526.1 கோடிக்கு விலை பேசப்பட்ட விமானத்தை ரூ.1,570.8 கோடிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வாங்குவதாக தகவல் கசிந்துள்ளது. கத்தார் நாட்டுக்கு ரூ.694.8 கோடிக்கு விற்கப்பட்ட ரபேல் விமானத்தை அதே நிறுவனம் இந்தியாவுக்கு 100 சதவீதம் அதிக தொகைக்கு ஏன் விற்க வேண்டும்? இந்த கொள்முதல் விலையை பிரதமரும், பாதுகாப்பு துறை அமைச்சரும் மறைப்பது ஏன்? என்று காங்கிரஸ் கேள்வி கேட்கிறது.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில், ராணுவ தளவாட ஒப்பந்த விவரங்கள் வெளிப்படையாக தெரிவிக்க முடியாது. அது எதிரி நாட்டுக்கு தெரிந்து விடும் என்று கூறியுள்ளார்.
வெளிநாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவரம் தெரிவிப்பது என்பது இதுவரையில் உள்ள நடைமுறை. ராணுவத்திற்கு போர் விமானம் வாங்குவது நாட்டின் பாதுகாப்பு அம்சத்தை கருத்தில் கொண்டது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். விமானத்தின் தொழில்நுட்பம் குறித்து தகவல் தெரிவிக்க கோரிக்கை விடப்படவில்லை. எவ்வளவுக்கு வாங்கப்படுகிறது. ஏன் விலை கூடுதலாக கொடுத்து வாங்கப்படுகிறது, ஒப்பந்தம் ரகசியமாக செய்வதற்கு காரணம் என்ன என்பது பற்றிய விவரங்களைதான் காங்கிரஸ் கேட்கிறது.
இந்த விவரங்களை வெளியிட அரசு மறுப்பது என்பது சந்தேகத்தின் பலனை அதிகரிக்கச் செய்கிறது. மக்களின் வரிப்பணத்தில் செலவழிக்கப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் விவரம் தெரிவிக்க வேண்டியது அரசின் கடமை. இதே கூற்றை, காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருந்தபோது தெரிவித்தவர் பிரதமர் மோடி.