புதுடெல்லி: ‘நாடு முழுவதும் பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்கக் கூடாது’ என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு செய்துள்ளது. தலைநகர் டெல்லியில் சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசு மிக அதிகளவில் உள்ளது. எனவே, நாட்டிலேயே முதல் முறையாக டெல்லியில் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க தடை விதிக்க உத்தரவிடக் கோரி கொல்கத்தாவை சேர்ந்த தத்தா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இது தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சிவகாசி மற்றும் விருது நகரை சேர்ந்த பட்டாசு உற்பத்தியாளர்கள், ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்ட விதிகளில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 27 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்கக் கூடாது என மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போது எதுவும் கூற முடியாது என மத்திய அரசு கைவிரித்து விட்டது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நேற்று மனு தாக்கல் செய்தது.
அதில், ‘நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்கக் கூடாது. அப்படி செய்தால், தமிழகத்தில் மட்டும் 8 லட்சம் உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும். இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். பட்டாசு வெடிப்பதால் கண்டிப்பாக சுற்றுச்சூழல் பாதிக்காது’ என கூறப்பட்டுள்ளது.
இது, நீதிபதி சிக்ரி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘பட்டாசுக்கு தடை விதிக்கக் கோரும் பிரதான வழக்கு 3 வாரத்தில் விசாரணைக்கு வருகிறது. அப்போது, தமிழக அரசின் மனுவும் விசாரிக்கப்படும்’ என அறிவித்தனர்.