ஐதராபாத்: ஆந்திராவில் திருடர்களை பிடிக்க புதிய மொபைல் செயலியை அம்மாநில போலீசார் பயன்படுத்தி வருவது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. எல்.எச்.எம்.எஸ். எனப்படும் லாக் ஹவுஸ் மானிட்டரிங் சிஸ்டம் மொபைல் ஆப் ஆந்திராவில் முக்கிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய செயலி மூலம் வெளியூர் செல்லும் பொதுமக்கள் செல்போனில் இருந்த படியே தங்கள் வீட்டை கண்காணிக்க முடியும்.
புதிய செயலியை டவுன்லோடு செய்து அதில் தங்கள் செல்போன் எண்ணை முதலில் பதிவு செய்துகொள்ள வேண்டும். பின்னர் வெளியுறவு செல்லும் போது பொதுமக்கள் புதிய ஆப் மூலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாரு தெரிவிக்கப்படும் தகவலின் மூலம் போலீசார் பூட்டிய வீடுகளில் கேமராவை பொருத்தி கண்காணிப்பர். திருடர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் கேமராவில் பொருத்தப்பட்ட சென்சார்கள் மூலம் போலீசாருக்கும் வீட்டின் உரிமையாளர்களுக்கும் உடனடியாக தகவல் சென்றுவிடும். அதன் மூலம் திருடர்களை பிடிக்க முடியும்.
திருட்டு செயல்களை கண்காணிக்க உதவும் புதிய செயலியை வீடுகளுக்கு மட்டுமல்லாது கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வைத்திருப்பவர்களும் பயன்படுத்த ஆந்திர போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.