சென்னை: ஜெயலலிதா மர்ம மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் வரும் 13ம் தேதி நேரில் ஆஜர் ஆகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க தமிழக அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான இந்த விசாரணை கமிஷன் தொடர்ந்து ஜெயலலிதா மரணம் குறித்து பல நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. சசிகலாவுக்கு டிசம்பர் 21ம் தேதி சம்மன் அனுப்பியது. பின்னர், கடந்த ஜனவரி 5ம் தேதி சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆணையத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அப்போது, விசாரணை ஆணையத்தின் முன்னர் பல வாதங்களை வைத்தார்.இந்நிலையில் ஏற்கனவே 12ம் தேதி விசாரணை ஆணையத்தில் ஆஜராகும்படி ஜெயலலிதாவின் கார் டிரைவர் ஐயப்பனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதை தொடர்ந்து 13ம் தேதி இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும், ஏற்கனவே 2 முறை விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்த அரசு மருத்துவர் பாலாஜி 3வது முறையாக வரும் 14ம் தேதி விசாரணை ஆணையத்தில் ஆஜராகும்படியும், சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன் வரும் 15ம் தேதி விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆகி விளக்கம் அளிக்கவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.