சிவகாசி பகுதியில் கேள்விக்குறியாகும் வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு

2018-02-10@ 13:00:16

* அடையாள அட்டை , இஎஸ்ஐ, பி.எப். இல்லை
* குறைந்த ஊதியத்தில் வேலை
* பணியிடங்களில் அடிப்படை வசதியில்லை

சிவகாசி :  சிவகாசி பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்தில் உயிருக்கும், உடமைக்கும் உத்தரவாதம் இல்லாமலும், அடிப்படை வசதி, பாதுகாப்பு இல்லாமல் பணிபுரிந்து வருகின்றனர்.   விருதுநகர் மாவட்டம், சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். பெரும்பாலும் பீகார், ஒடிஸ்ஸா, அஸ்ஸாம் மாநிலங்களைச் சேர்ந்தவர்களை ஒப்பந்த அடிப்படையில், அழைத்து வந்து வேலை வாங்குகின்றனர்.

அட்டை மில் கம்பெனிகள், தீப்பெட்டித் தொழிற்சாலைகள், பிரிண்டிங் ஆலைகள், பேக்கேஜிங் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு குறைந்த ஊதியம் கொடுத்து அதிக நேரம் வேலை வாங்குகின்றனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. சிவகாசியில் சில முன்னணி நிறுவனங்கள், ஆலைகளில் மட்டும் வடமாநில தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ, பிஎப் பிடிக்கப்பட்டு வேலைக்கு தகுந்த ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், பெரும்பாலான கம்பெனிகளில் வடமாநில தொழிலாளர்கள் எந்த உத்தரவாதமின்றி பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு சாப்பாடு, தங்குவதற்கு இடம் கொடுத்து குறைந்த ஊதியம் வழங்கப்படுவாக கூறப்படுகிறது. தொழில் செய்யும் இடத்தில் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதில்லை. மாறாக கம்பெனி உரிமையாளர் தோராயமாக கொடுக்கும் தொகையை வாங்கி கொள்கின்றனர். ஏஜெண்ட் மூலம் வேலைக்கு வந்துள்ள இவர்களுக்கு விபத்து பாதுகாப்பு ஏற்படுத்த, தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

டிரான்ஸ்போர்ட் அசோசியன் கொளரவ தலைவர் முருகன், ‘தமிழகத்தில் குறைந்த ஊதியத்திற்கு ஆட்கள் கிடைப்பதில்லை. வடமாநிலத்தில் இருந்து குறைந்த கூலிக்கு வேலைக்கு அழைத்து வருகின்றனர். அவர்களுக்கு போதிய ஊதியம் கொடுத்து, பாதுகாப்பு அளிக்க வேண்டும். நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம் ஆலோசகர் செல்லத்துரை, ‘சிவகாசியில் உள்ள தீப்பெட்டி, பிரிண்டிங் உள்ளிட்ட அனைத்து தொழிற்சாலைகளில் முன்பு 80 சதவீதம் பேர் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் பணிபுரிந்தனர். ஆனால் இப்போதோ பீகார், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஓடிஸா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகமாக பணிபுரிகின்றனர். இவர்களுக்கு போதிய ஊதியமோ, பாதுகாப்போ இல்லை.

மனிதவள மேம்பாடு நிறுவன இயக்குநர் விஜயகுமார், ‘சிவகாசியில் வட மாநில  தொழிலாளர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுக்கின்றனர். பணி நடக்கும் இடங்களிலேயே தங்க வைப்பதால், அதிக நேரம் வேலை செய்கின்றனர். அவர்கள் வேலை செய்யும் நிறுவனம் சார்பாக அடையாள அட்டை எதுவும் வழங்கப்படுவதில்லை. பணியின்போது இறந்தால், நிவாரணம் கிடைக்க, காப்பீடு செய்வதில்லை. மருத்துவ வசதி கிடைக்க ஏற்பாடு செய்வது இல்லை.  

சிஐடியு மாவட்ட செயலாளர் பி.என்.தேவா: தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்து தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும் என 2010ல் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. சென்னை உட்பட முக்கிய நகரங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கான சலுகைகள் கிடைக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை இல்லை.
வெளிமாநில தொழிலாளர்களின் ஏஜெண்ட் கமல், ‘சிவகாசியில் கடந்த 15 வருடமாக ஒப்பந்த முறையில் தொழிலாளர்களை அழைத்து வந்து பணியில் அமர்த்தி வருகிறோம். 100 பேரில் 5 பேர் மட்டுமே நீண்ட காலமாக பணிபுரிகின்றனர்.

 இதனால், அனைவருக்கும் அடையாள அட்டை, இஎஸ்ஐ, பிஎப் பிடிப்பதில் நடைமுறை சிக்கல் உள்ளது. நாங்கள் அழைத்து வரும் தொழிலாளர்கள் எங்களது கண்காணிப்பில்தான் உள்ளனர். தொழிலாளர்களுக்கு சிறு பாதிப்பு ஏற்பட்டால் அன்றைக்கு எந்த கம்பெனியில் வேலை பார்க்கின்றாறோ அந்த கம்பெனி உரிமையாளர் உரிய நிவாரணம் வழங்கிவிடுகின்றனர்’ என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!