வள்ளியூர்: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் நெல்லையில் இருந்து 50 கிமீ வரையிலான சாலை பராமரிப்பு பணிகள் செய்வதற்காக நாங்குநேரியில் டோல்கேட் அமைக்கப்பட்டு கட்டண வசூல் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாங்குநேரியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சாலைகளில் விபத்து ஏற்படாத வகையில், சாலையோரங்களில் பல லட்சம் மதிப்பிலான தடுப்பு கம்பிகள் மற்றும் கம்பி வேலிகள் இருபுறங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கம்பிகளில் வாகனங்கள் மோதி விபத்திற்குள்ளாகும் போது அவை சீரமைக்கப்படாமல் கண்டுகொள்ளப்படாமல் விடப்படுகின்றன. இதனால் ஆங்காங்கே தடுப்பு கம்பிகள் நீண்டும், வளைந்தும் போக்குவரத்துக்கு இடையூறாகவும், வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் விதமாகவும் காட்சியளிக்கின்றன.
குறிப்பாக வள்ளியூரில் இருந்து பணகுடி செல்லும் சந்திப்பில் உள்ள சாலையோர தடுப்பு கம்பிகள் உடைந்து பராமரிப்பின்றி சாலையோரத்தின் குறுக்கே அச்சுறுத்தலாக நிற்கிறது. இந்த கம்பியால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அவ்வப்போது இருசக்கர வாகனத்தில் செல்லும் நபர்கள் உரசியபடியே உயிர் தப்பி பிழைத்து செல்கின்றனர். கனரக வாகனங்களும் அவ்வப்போது இந்த கம்பியில் உரசியபடியே செல்கிறது. இதேபோல் வள்ளியூர் புறவழிச்சாலையில் நம்பியான்விளை மேம்பாலத்தில் இருந்து 2 கிமீ தூரத்திற்கு சாலையோரத்தில் பல லட்சம் மதிப்பிலான தடுப்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். தொடர்ந்து தடுப்பு கம்பிகள் திருட்டும் அரங்கேறி வருகிறது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும், சாலையோர தடுப்பு கம்பிகள் திருட்டு குறித்து எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை என போலீசார் அலட்சியமாக இருந்து வருகின்றனர். இதில் நெடுஞ்சாலைத்துறை சம்பந்தப்பட்டு உள்ளதால் காவல் துறையினரும் அலட்சியம் காட்டிவருகின்றனர்.
இதனால் இப்பகுதியில் சாலையோர தடுப்பு கம்பிகள் இல்லாமல் அதிகளவிலான விபத்துகள் அரங்கேறியுள்ளது. உயிர் இழப்புகளும் ஏற்பட்டு உள்ளன. நெடுஞ்சாலைத் துறையினரிடம் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் வாகன ஓட்டிகளிடம் டோல்கேட்டில் சாலை பராமரிப்பிற்காக கட்டணம் வசூல் செய்து வருகின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அலட்சியம் செய்யாமல் சாலையோர தடுப்பு கம்பிகளை பராமரித்து வளைந்து நெளிந்து காணப்படும் தடுப்பு கம்பி வேலிகளை சரிசெய்ய போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.