சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தையின் போது, இரு தரப்பிலான கோரிக்கைகளையும் 7 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய நீதிபதி பத்மநாபன் உத்தரவிட்டுள்ளார். ஊதிய உயர்வு, ஓய்வூதிய தொகை வழங்குதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த மாதம் 8 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தை கைவிட உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தொடர்ந்து, அரசுக்கும், போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தராக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை நியமனம் செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதை தொடர்ந்து, நேற்று சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை நிலையத்தில் மத்தியஸ்தராக நியமனம் செய்யப்பட்டுள்ள நீதிபதி பத்மநாபன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.இந்த பேச்சுவார்த்தையில் அண்ணா தொழிற்சங்கம், தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை உள்ளிட்ட 22 போக்குவரத்து சங்கத்தை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். அரசு தரப்பில் போக்குவரத்து செயலாளரும், போக்குவரத்து மேலாண்மை இயக்குனர்களும் கலந்து கொண்டனர்.
அப்போது, நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் அரசு தரப்பிலான வாதங்களை வழக்கறிஞர் விஜயநாராயணன் எடுத்துரைத்தார். பின்னர் தொழிற்சங்கங்கள் சார்பிலான கோரிக்கைகளை அந்தந்த தொழிற்சங்கங்களை சேர்ந்த வழக்கறிஞர்கள் நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் எடுத்துரைத்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பத்மநாபன், இரு தரப்பினரும் தங்களது கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து, இரு தரப்பினரையும் வருகிற 24ம் தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு ஆஜராக உத்தரவிட்டதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.