புதுடில்லி : நிறுவனங்களின் அடையாளமாக, பான் எண்ணை பயன்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், போலி நிறுவனங்கள், மோசடி தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றை ஒழிக்க முடியும் என, அரசு கருதுகிறது.
'பான் கார்டு' எனப்படும் நிரந்தர கணக்கு எண் அட்டை, வருமான வரி செலுத்துவோருக்காக, மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. வருமான வரி செலுத்தாவிட்டாலும், வங்கி கணக்கு துவங்குவது உட்பட பலவற்றுக்கு அடையாள அட்டையாக, பான் கார்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது
உத்தரவு
பான் கார்டு பயன்படுத்துவதன் மூலம், வங்கி, பண, வரி பரிவர்த்தனைகள், கடன், முதலீடு, வாங்கி விற்கும் நடவடிக்கைகள் போன்ற அனைத்தையும், ஒரு கண்காணிப்பின் கீழ், அரசு கொண்டு வருகிறது.இதன் மூலம், வரி ஏய்ப்பு மறைமுகமாகத் தடுக்கப்படுகிறது. தவிர, இந்திய குடிமகன் என்பதற்கான அடையாள ஆவணமாகவும், பல இடங்களில் பான் கார்டு பயன்படுகிறது. இப்போது, பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, 2018 -19ம் ஆண்டு நிதியாண்டுக் கான பட்ஜெட்டை, பார்லிமென்டில், பிப்., 1ல் தாக்கல் செய்தார். அப்போது, நிறுவனங்களின் அடையாளமாக, பான் எண்ணை பயன்படுத்துவது பற்றி, அரசு ஆலோசித்து வருகிறது என, தெரிவித்தார்.இந்நிலையில், நிறுவனங்களின் அடையாளமாக பான் எண்ணை பயன்படுத்துவதற்கான நடவடிக்கைளை, மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
இது பற்றி, மத்திய நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:நிறுவனங்களின் தனி அடையாளமாக பான் எண்ணை பயன்படுத்துவது பற்றி, இரண்டு ஆண்டுகளாகவே, அரசு ஆலோசித்து வருகிறது. இது பற்றி, தொழில் அதிபர்களுடன், அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
வரி ஏய்ப்பு
வரி செலுத்தாத நிறுவனங்கள், லாப நோக்கில் செயல்படாத அறக்கட்டளைகள், சமூக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் உட்பட அனைத்து அமைப்புகளும் நிறுவனங்களும், கட்டாயமாக பான் கார்டு பெற வேண்டும்.இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள், நிர்வாகி கள் ஆகியோரின் ஆதார் எண்கள், இந்த பான் எண்ணுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அப்போது, நிறுவனங்களின் தனி அடையாளமாக, பான் எண் இருக்கும்.இதன் மூலம் போலி நிறுவனங்கள் ஒழிக்கப்படும்; பினாமிகள் பெயரில், நிறுவனங்கள் துவக்க முடியாது. மேலும், எந்த நிறுவனத்தாலும், வரி ஏய்ப்பு செய்ய முடியாது. அத்துடன், நிறுவனங்களின் இயக்குனர்கள், நிர்வாகிகள் ஆகியோரின் தனிப்பட்ட பான் எண்களை, நிறுவனத்தின் பான் எண்ணுடன் இணைக்க கேட்டுக் கொள்ளப்படுவர்.நாட்டில், 30 கோடிக்கு அதிகமான பான் எண்கள் உள்ளன. இதில், 15 கோடிக்கு அதிகமானஎண்கள், ஆதாருடன் இணைக்கப்பட்டு விட்டன. எப்படி தனிப்பட்ட நபர்களுக்கு ஆதார் எண் அடையாளமாக உள்ளதோ, நிறுவனங்களுக்கு அடையாளமாக பான் எண் இருக்க வேண்டும் என அரசு விரும்புகிறது. இதனால், வரி செலுத்தும் முறை எளிதாகும்.
22 கோடி நிறுவனங்கள்
நாடு முழுவதும், தற்போது பான் எண் பெற்று உள்ள நிறுவனங்களை தவிர, 20 - 22 கோடி நிறுவனங்கள், இன்னும் பான் எண்ணை பெறவில்லை. இவைகளும், பான் எண் வாங்க வேண்டும். இவர்களுக்கு பான் எண் வழங்குவதும், ஆதாருடன் இணைப்பதும், பெரிய சவாலாக இருக்காது.நிறுவனங்களின் அடையாளமாக பான் எண் மாறி விட்டால், பினாமி பண பரிவர்த்தனை முற்றிலும் ஒழிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறிய தாவது: அமெரிக்காவில் உள்ளது போல், இந்தியாவில், குடிமகன்களின் தேசிய அடையாளமாக, ஆதார் எண் இருக்க வேண்டும், அப்போது, நிறுவனங்களின் அடையாள எண்ணாக பான் எண்ணை மாற்றுவது எளிது. அதனால், நாட்டில் அனைவரும், முதலில் ஆதார் அட்டை பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒரு நிறுவன பெயரில் வாங்கப்பட்ட பான் கார்டை, வேறொருவருக்கு மாற்ற முடியாது. பான் கார்டு வழங்கும் முறை, மிக துல்லியமானது. தவறான தகவல்கள், ஆவணங்கள் கொடுத்து, ஒருவர் ஒரு பான் கார்டிற்கு மேல் வைத்திருப்பது, சட்டப்படி குற்றமாகும். மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு நடவடிக்கைக்கு பின், பல போலி நிறுவனங்களின் பெயர்களில், வங்கிகளில் பணம் செலுத்தப் பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பான் எண்ணை, கட்டாயமாக்கினால், இதுபோன்ற மோசடிகள் நடப்பதை தடுக்க முடியும். பெயரை மட்டும் பதிவு செய்துவிட்டு, நிறுவனங்கள் செயல்படாமல் இருக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (8)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply