4 தமிழக மீனவர் விடுதலை : யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவு

2018-02-10@ 01:23:52

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்திலிருந்து கடந்த ஜனவரி மாதம் மீன் பிடிக்க சென்றபோது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மண்டபம் மீனவர்கள் ஜெயசீலன் (55), சீனி இப்ராகிம்சா (42), முனியசாமி (55), பாலகுமார் (32) ஆகிய நால்வரும் இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் விசாரணை கைதிகளாக இருந்தனர். சிறையில் உள்ள மீனவர் ஜெயசீலனின் மகன் ஸ்டீபன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வலிப்பு நோயினால் இறந்து போனார். மகனின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள ஜெயசீலனை சிறையில் இருந்து விடுவித்து தமிழகத்திற்கு அழைத்து வரவேண்டும் என்று உறவினர்கள் அரசிடம் வலியுறுத்தினர். இதனைதொடர்ந்து இலங்கையிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள், அவரை விடுவிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர். இதற்காக மீனவர் ஸ்டீபனின் இறப்பு சான்றிதழின் நகல், தமிழக மீன்வளத்துறை அதிகாரிகளால் இலங்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனால் சிறையில் உள்ள ஜெயசீலன் உட்பட அவருடன் கைதான இப்ராகிம்சா, முனியசாமி, பாலகுமார் ஆகிய 4 மீனவர்களையும் விடுவிக்க இலங்கை சட்டமா அதிபருக்கு, அந்நாட்டு அரசு பரிந்துரை செய்தது. கொழும்பில் உள்ள சட்டமா அதிபர் அலுவலகத்திலிருந்து மீனவர்களை விடுவிப்பதற்கான உத்தரவு நேற்று மாலை வந்ததை தொடர்ந்து 4 மீனவர்களையும் விடுவித்து யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து 4 மீனவர்களும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு நேற்று மாலை யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் நால்வரும் இன்று அல்லது நாளை சொந்த ஊர் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!