கோவா : பெண்களும் மது அருந்தத் தொடங்கியுள்ளது தமக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார். கோவாவில் இளைஞர் நாடாளுமன்றம் என்ற மாணவர் கூட்டத்தில் உரையாற்றிய அவர், தாம் பள்ளி மற்றும் கல்லூரி பயின்ற காலத்தில், தம்முடன் பயின்ற ஒரு பிரிவினர் போதைக்கு அடிமையாகியிருந்ததாக நினைவு கூர்ந்தார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13-ல் போதை மருந்து பயன்படுத்திய 170 பேர், தமது உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் போதை மருந்துகளை குறைந்த அளவில் பயன்படுத்துவோரை நீதிமன்றமும் கருணை அடிப்படையில் ஜாமீன் வழங்குகிறது என்றும் எப்படியோ குற்றவாளிகள் போலீசாரால் கைது செய்யப்படுவோம் என்ற அச்ச உணர்வு தற்போது உள்ளது என அவர் தெரிவித்தார் .
தற்போதைய சூழ்நிலையில் பெண்களும் மது அருந்துவது தமக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், அவர்களின் சகிப்புத் தன்மை குறைந்திருப்பதாகவும் மனோகர் பாரிக்கர்தெரிவித்தார். தாம் அனைத்து பெண்களையும் குறிப்பிடவில்லை எனவும் அவர் விளக்கமளித்தார்.
வேலையில்லா திண்டாட்டம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு கோவா இளைஞர்கள் கடுமையாக உழைக்க முன் வரவேண்டும் என கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார். மேலும் அரசு வேலை என்றால் அதிகமாக உழைக்க வேண்டாம் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உள்ளதாக தெரிவித்தார்.