சென்னை: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று 5வது நாளாக சேலம் கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் கள ஆய்வு நடத்தினார். இன்று சேலம் மத்தி, தர்மபுரி மாவட்டங்களுக்கான கள ஆய்வு நடைபெறுகிறது. திமுகவில் மாவட்ட வாரியாக கட்சி மற்றும் பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகளுடன், திமுக செயல் தலைவரும் தமிழக எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், உடன்பிறப்புகளுடன் கள ஆய்வு என்ற பெயரில் ஆலோசனை நடத்தி கருத்துக்களை கேட்டு அறிந்து வருகிறார். இதையொட்டி, திமுகவினரிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறுவதற்கான தீர்வு காணும் பெட்டியும் வைக்கப்பட்டுள்ளது. கள ஆய்வு முடிந்ததும் திமுகவினருடன் அமர்ந்து மு.க.ஸ் டாலின் மதிய உணவு சாப்பிடுகிறார். பின்னர் மாலையில் மீண்டும் கள ஆய்வு தொடங்குகிறார். இரவு வரை இது நீடிக்கிறது.
இந்த நிகழ்ச்சி கடந்த 1ம் தேதி தொடங்கியது. முதல் நாளன்று கோவை மாநகர் தெற்கு, வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகளும், மாலையில் நீலகிரி மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அவர்களிடம் மு.க.ஸ்டாலின் தனித்தனியாக ஆலோசனை நடத்தி குறைகளை கேட்டறிந்தார். காலை முதல் இரவு வரை இந்த ஆலோசனை நடந்தது. ஏராளமானவர்கள் கோரிக்கை மனுக்களை பெட்டியில் போட்டனர். கடந்த 3ம் தேதி 2ம் நாள் கள ஆய்வு நடந்தது. காலையில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் முதலில் கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகளை தனியாக சந்தித்து மு.க.ஸ்டாலின் கருத்துக்களை கேட்டார். கடந்த 7ம் தேதி 3ம் நாளாக நடந்த கள ஆய்வில் முதலில் ஈரோடு வடக்கு மாவட்ட செய லாளர் நல்லசிவம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து மாலையில் ஈரோடு தெற்கு மாவட்ட நிர்வாகிகளுக்கான கள ஆய்வு நடை பெற்றது. மாவட்ட செயலா ளரும் முன்னாள் அமைச்சருமான முத்துச்சாமி மற்றும் நிர்வாகிகள் களஆய்வில் கலந்து கொண்டனர்.
கடந்த 8ம் தேதி 4ம் நாள் கள ஆய்வு காலை 9 மணிக்கு தொடங்கியது. காலையில் நடந்த ஆய்வில் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ், திமுக நிர்வாகிகள், ஊராட்சி, பேரூராட்சி செயலாளர்கள், அணிகளின் மாவட்ட, துணை அமைப்பாளர்கள், ஒன்றிய, நகர, செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு, பொதுக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். மாலையில் நடந்த ஆய்வில் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பத்மநாபன், இளைஞர் அணி செயலாளர் மு.பெ.சாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். ஏராளமானவர்கள் கோரிக்கை மனுக்களை பெட்டியில் போட்டனர். இந்த நிலையில், 5ம் நாளாக நேற்று காலை 11.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு நடத்தினார்.
இதில் பேரூர், ஒன்றியம், நகர செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் உள்பட பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பின்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அரங்கில் வைக்கப்பட்டிருந்த தீர்வு காணும் பெட்டியில் மனுக்களை போட்டனர்.
தொடர்ந்து மாலையில் சேலம் மேற்கு மாவட்டத்திற்கான கள ஆய்வு நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் சிவலிங்கம், ஊராட்சி, பேரூராட்சி செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், ஒன்றிய, நகர செயலாளர்கள் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். இன்று 6வது நாளாக காலையில் சேலம் மத்தி திமுக மாவட்ட நிர்வாகிகளுக்கான கள ஆய்வு நடைபெறுகிறது. மாலையில் தர்மபுரி மாவட்ட நிர்வாகிகளுக்கான கள ஆய்வு நடக்கிறது.