நாமக்கல்: நாமக்கல் அருகே துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் கை, கால்கள் சாலையோரம் வீசப்பட்டு கிடந்தது.இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர். நாமக்கல் மாவட்டம் நல்லிகவுண்டன்புதூர் கிராமத்திலுள்ள பாலத்திற்கு அடியில் நேற்று காலை ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. அதனருகில் இளம்பெண்ணின் கை, கால்கள் துண்டு, துண்டாக வெட்டப்பட்ட நிலையில் உள்ளே இருந்தது. சற்று தூரத்தில் 3 ஆடுகள் கொல்லப்பட்டு கிடந்தன. இதுகுறித்த தகவலின்பேரில், நல்லிபாளையம் போலீசார் சென்று, சாக்குமூட்டையை பிரித்து பார்த்தனர். அதில், 2 கால்களும், ஒரு கையும் இருந்தது. கையில் மருதாணி போட்ட அடையாளம் இருந்தது. மேலும், நெயில் பாலீசும் போடப்பட்டிருந்தது. அந்த உடல் பாகங்கள் சுமார் 25 முதல் 35 வயதுக்குள் இருக்கும் பெண்ணுடையது என்பது உறுதியானது.
கைப்பற்றப்பட்ட 2 கால்கள் மற்றும் கை ஆகியவை, உடலில் இருந்து மிகவும் துல்லியமாக, அளவு எடுத்து வெட்டியது போல் துண்டிக்கப்பட்டுள்ளது. கொலை செய்து 2 நாள் கழித்து, உடல் உறுப்புகளை தனியாக துண்டித்து குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்து, பின்னர், எடுத்து வந்து வீசிச்சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மருத்துவம் படிப்பவர்கள் மற்றும் டாக்டர்களின் உதவியோடு கை, கால்களை துண்டித்து இருக்கலாம் என்ற சந்தேகமும் வலுத்துள்ளது. போலீசாரின் கவனத்தை திசை திருப்பவே, அருகிலேயே 3 ஆடுகளை கொலை செய்து வீசி விட்டு சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இதுகுறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குபதிந்து பெண்ணின் உடலை தேடி வருகின்றனர். பெண்ணை யாராவது கடத்தி வந்து, பாலியல் பலாத்காரம் செய்து கொன்றார்களா? அல்லது அவர் நரபலி கொடுக்கப்பட்டாரா? என்பது குறித்து விசாரிக்கின்றனர்.